சென்னை: சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க 2 இடங்களில் ஆய்வு நடத்த இந்திய விமான போக்குவரத்து துறை ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் வந்து செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடு அதிகரித்துள்ளதால், 2வது விமான நிலையம் அமைக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

அதன்படி, 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு பணியில் இந்திய விமான போக்குவரத்து துறை ஆணையம் களம் இறங்கியிருக்கிறது. அதற்காக, மாமண்டூர், செய்யூர் இடையேயும், காஞ்சிபுரம், அரக்கோணம் இடையே பரண்டூர் அருகே என 2 இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்து இருக்கிறது.

தமிழக அரசு பரிந்துரைக்கிற இந்த 2 இடங்களும் சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அடுத்த வாரத்தில், டெல்லியில் இருந்து விமான போக்குவரத்து துறை ஆணைய அதிகாரிகள் தமிழகம் வர உள்ளனர்.

இது குறித்து மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: விமான போக்குவரத்தில் ஏற்படும் இடையூறு, வான்வெளி ஆகியவற்றை முக்கியமாக கருத வேண்டி இருக்கிறது. பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள இருக்கிறோம்.

அந்த இடத்தில் விமானங்கள் பறக்கும் போகும் போது ஏதேனும் தடைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்றும் சோதிக்க உள்ளோம். தமிழக அரசு பரிந்துரைக்கிற 2 இடங்களையும் பார்வையிடுவோம். அறிக்கை சமர்ப்பிப்போம்.

பாதுகாப்பு துறை  அதிகாரிகள் இடம்பெற்றுள்ள, மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் கமிட்டி ஒன்று உள்ளது. அந்த கமிட்டி, முதற்கட்ட அனுமதி வழங்கும்.

அந்த அறிக்கையை விமான போக்குவரத்து துறை ஆணையம் பரிசீலிக்கும். சிறந்த இடம் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு, 2வது விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வை நடத்த தயாராகும்.

விமான ஓடுதளம் மற்றும் விமான நிலையம் அமைக்க எவ்வளவு நிலம் தேவைப்படும் என்பதை முடிவு செய்ய இயலும். 1,500 முதல் 2,000 ஏக்கர் வரை நிலம் தேவைப்படும்.

அதற்காக எவ்வளவு விரைந்து இடத்தை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்டிருந்தது. நிச்சயம் தமிழக அரசு பரிந்துரைக்க இடங்களில் ஏதேனும் ஒன்றை தான் 2வது விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்படும் என்று கூறினர்.