சென்னை

நடிகை விஜயலட்சுமி தான் சீமான் மீது கொடுத்த புகாரைத் திரும்ப பெற்றுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பிரபல இயக்குநருமான சீமான் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  அந்த புகாரில் தன்னை அவர் திருமண ஆசை காட்டி பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறி இருந்தார்.  மேலும் தாம் சீமான் கேட்டுக் கொண்டதல்ல கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மீது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  இந்நிலையில் இது குறித்து சீமான் சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு மனு அளித்தார்  அந்த மனுவில் அவர் தம்மை விசாரிக்கும் அதே நேரத்தில் மேலும் மூவரையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  இது மக்களிடையே மேலும் பரபரப்பானது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரைத் திரும்பப்பெற்றுள்ளார். அப்போது நடிகை விஜயலட்சுமி, வழக்கை திரும்பப்பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்தார்.

தவிர ”இந்த விவகாரத்தில் காவல்துறை சரியான  நடவடிக்கை எடுக்கவில்லை, என்னால் தனி ஒருவராகப் போராட முடியவில்லை. எனக்கு சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.