டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.

அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.  ஏற்கனவே இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளதால் கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது.

இன்று,டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம்,

“முதல்வர் கெஜ்ரிவாலை அரசியல் சதித் திட்டத்தின்படி கைது செய்ய பா.ஜ.க. விரும்புகிறது.  இதை பாஜக தலைவர் மனோஜ் திவாரி வெளியிட்ட அறிக்கை நிரூபிக்கிறது. அவர் கெஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறுகிறார்.

அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை காலி செய்யத் திட்டம் தீட்டுகின்றனரா? என அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகிறது. மத்திய முகமைகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. இன்று காலை திடீரென ராஜ் குமார் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

பாஜகவினர் என்ன செய்ய விரும்புகிறார்கள்?  பாஜக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து விட்டால், தங்களால் மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது எனப் பயப்படுகிறது”

என்று கூறியுள்ளார்.