மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர்.

இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800 பேர் குடியுரிமை கிடைக்காததால் மீண்டும் பாகிஸ்தான் திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் இந்துக்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமந்த் லோக் சங்கதன் என்ற அமைப்பு கூறியுள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் இந்துக்கள் சுமார் 25000 பேர் ராஜஸ்தானில் தங்கி இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

2018 ம் ஆண்டு முதல் குடியுரிமை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுவதைத் தொடர்ந்து ஏராளமானோர் அதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் பலர் தங்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் காலாவதியானது கூட தெரியாமல் இருந்ததால், அதனை புதுப்பிக்க டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பாஸ்போர்ட்களை புதுப்பிக்க நபர் ஒன்றுக்கு சுமார் 10000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும் 10 பேர் உள்ள குடும்பங்கள் இதற்காக 1 லட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பா.ஜ.க. அரசால் தங்கள் வாழ்வில் விளகேற்றப்படும் என்று இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்து காத்திருந்த சுமார் 800 பாகிஸ்தான் சிறுபான்மை இந்துக்கள் நீண்ட காலமாகியும் குடியுரிமை கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டதால் 2021 ம் ஆண்டு வேதனையுடன் மீண்டும் பாகிஸ்தான் திரும்பியதாகத் தெரிவித்துள்ளது.