கோவை: அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திராவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாக விளங்கும் மஹிந்திரா குரூப் நிறுவன தலைவராக ஆனந்த் மகிந்திராஇருந்து வருகிறார். இவர் பல திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து வருவதுடன், கலை, கலாச்சாரம், மொழி உள்பட சமூக சேவைகளிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். இவர் தற்போது ஏழ்மையில் இட்டி செய்து வியாபாரம் நடத்தி காலத்தை ஓட்டி வந்த கோவை இட்லி பாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடு, அன்னையர் தினமான நேற்று (ஏப்ரல் 8ந்தேதி), அன்னையர்களை கவுரவப்படுத்தி உள்ளதுடன், தனது தாராள குணத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.

நான் கற்ற முதல் தமிழ் வார்த்தை இதுதான் என பொங்கல் அன்று ஆனந்த் மகிந்திரா போட்ட சூப்பர் டிவீட்  வைரலான நிலையில், அவரது பல சேவைகள், டிவிட்கள் நாட்டு மக்களிடையே வைரலாகி வருவதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.  தனது ஷோரூமில் அவமதிக்கப்பட்ட விவசாயி குறித்து நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்ததுடன்,  தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா? உலக அளவில் டிரெண்டான நம்ம கொல்லி மலையை உலக அளவில் பிரபலப்படுத்தினார். தொடர்ந்து பழைய பொருட்கள் மூலம் புது காரை தயாரித்தவருக்கு தனது நிறுவனத்தின் தார் ஜீப்பை வழங்கி சர்ப்பைஸ் கொடுத்தவர் ஆனந்த் மகேந்திரா. அதுபோல  ‘கைல காசு இல்லையா, அப்போ ஆன்லைன் பேமன்ட் பண்ணுங்க..’ பூம்பூம் மாட்டுக்காரரின் செம ஐடியா வரவேற்றதுடன், ஆட்டோவை வீடாக மாற்றிய தமிழர்,  இணையத்தில் வைரலாகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ‘ஷூ’ டாக்டர் மற்றும் பலரது சேவைகளை திறமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கோவை கமலாத்தாள்  இட்லி பாட்டி குறித்த தகவல் அறிந்து அவருக்கு பல உதவிகளை செய்து வந்தவர், அவரது ஆசை மற்றும் கோரிக்கையை ஏற்று, மூன்று மாதத்தில் அழகிய வீடு கட்டிக்கொடுத்து, அன்னையர் தினத்தில் அவர் மூலமே வீட்டை திறக்கவைத்து கவுரவப்படுத்தி உள்ளார்.

கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி (85). இவர்,  கடந்த 30 வருடங்களாக விற்பனை செய்து வருகிறார். சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற் காலையிலேயே தயார் செய்து விற்று வருகிறார். இவரது இந்த கை பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் வந்து செல்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையை கூட்டி உள்ளார். தற்போது ஒரு இட்லி விலை ரூ.1 மட்டுமே. இட்லி சமைக்க காஸ் அடுப்பு கிடையாது. மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது. சட்னி அரைக்க மிக்ஸி கிடையாது. எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும் தான். ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா கடந்த 2 ஆண்டுக்கு முன், அவரை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கி அவரது சேவைக்கு உதவி செய்தார். இதைத்தொடர்ந்து, அரசின் எரிவாயு நிறுவனங்களும் மாதம் 3 சிலிண்டர்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு, தனக்கு கடையை விரிவுப்படுத்த தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல்அதிகாரி புகழ் என்பவரிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை அறிந்த ஆனந்த் மஹிந்திரா அவருக்கு வீடுகட்டிக்கொடுக்க முன்வந்தார்.

அதன்படி, 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக்கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளை மகேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி 28ம் தேதி ரூ.7 லட்சம் செலவில் துவங்கியது. அதிரடியாக வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், 3 மாதத்தில் வீடு கட் முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  அன்னையர் தினமான மே 8ந்தேதி  கமலாத்தாள் பாட்டிக்கு அந்த வீட்டை மஹிந்திரா நிறுவனத்தினர் பரிசாக அளித்தனர். அத்துடன்  கமலாத்தாள் பாட்டி மூலம் வீட்டை ரிப்பன் வெட்டி திறக்க வைத்து கவுரப்படுத்தினார்.

இந்த நிகழ்வுகளை, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவுடன்  பகிர்ந்துள்ளார். அவர், ‘‘எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவருக்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மகிந்திராவின் சேவைகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வரவேற்று டிவிட் பதிவிட்டுள்ளனர். அவரது விடியோ வைரலாகி வருகிறது.

ஆனந்த் மகிந்திராவின் சேவைக்கு பத்திரிகை டாட் காம் இணையதளமும் ‘ஹாட்ஸ் ஆப் (Hats off)’ தெரிவித்து பாராட்டுகிறது.