பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கியது தெரியவந்துள்ளது.

தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate Social Responsibility – CSR Fund) இருந்து 2021-22 நிதியாண்டில் 10.5 கோடி ரூபாயை சென்னை ஐ.ஐ.டி.க்கு வழங்கியுள்ளது பவர் கிரிட் கார்ப்பரேஷன்.

இந்த நிதி முழுவதும் EWS பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் படிப்பு உதவித் தொகையாக வழங்க வகை செய்துள்ளது.

எஸ்.சி. / எஸ்.டி. / இதர பிற்பட்ட வகுப்பினருக்கு எந்த ஒரு நிதியையும் இந்த நிறுவனம் ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட பிரிவை / சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் பயன்படும் வகையில் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் செயல்பட்டிருப்பது அத்துமீறிய செயல் என்றும்.

அந்த நிறுவனத்தின் செயல்பாடு குறித்து மத்திய மின்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சலுகை காட்டும் வகையில் நடந்து கொண்ட நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.