சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான 3கட்ட கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில், காலியாக உள்ள 54676 இடங்களுக்கு துணை கவுன்சிலிங்க வரும் 6ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்,  440  பொறியியல்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி கல்வித்துறை  நடத்தி வருகிறது.   நடப்பாண்டு, மொத்தமுள்ள  1,44,636 இடங்களுக்கான கவுன்சிலிங் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய கவுன்சிலிங், செப்டம்பர் 3ந்தேதியுடன்  நிறைவுபெற்றது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங்கில் மூன்று சுற்றுகள் நிறைவு அடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 2.19 லட்சம் இடங்களுக்கான பி.இ.- பி.டெக் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டின்படி, ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

முதல் சுற்றில் 14,211 இடங்களும், இரண்டாம் சுற்றில் 35,474 இடங்களும் நிரம்பின.  3வது சுற்றுக்கு 94,951 இடங்கள் இருந்த நிலையில், 3வது சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகும்,  54676 இடங்கள் காலியாக உள்ளன.  மூன்று சுற்றுகளாக நடந்த இந்த பொது கவுன்சிலிங்கில், அரசுப் பள்ளி மாணவர் பிரிவில் 11,058 பேரும், மற்ற பிரிவுகளில்95,046 இடங்களும் என ஒரு லட்சத்து ஆறாயிரத்து104 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காலியாக உள்ள  54,676 இடங்களை  நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.