சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கை படையாக திரண்டு வருக என  திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

 திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள  கடிதத்தில்,  ஒரு மாநில கட்சி முக்கால் நூற்றாண்டு காலம் தன் மக்களின் நலன் காக்க உறுதியாகப் போராடியும், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியால் அந்த மாநிலத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியும், இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்களை வகுத்தும், சட்டங்களை உருவாக்கியும் இன்று இந்தியாவை வழிநடத்தக்கூடிய வகையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றும் திகழ்கிறது என்றால் அந்தப் பெருமை நம் உயிராகவும், உதிரமாகவும் திகழ்கின்ற திமுகவிற்கே உரியது.

திமுகவின் தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற வகையிலும் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களால் வரவேற்கப்பட்டேன். இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பை மாநகரில் 2 நாட்கள் நடைபெறும் என்றும் அதில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அறிவிக்கப்பட்டபோது, பாஜ அரசின் பயத்தின் விளைவை சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைப்பு நாடகம் அம்பலப்படுத்திவிட்டது.

10 ஆண்டு காலமாக இந்தியாவை மதத்தின் பெயரால் பாழ்படுத்தி, கடும் விலையேற்றத்தால் மக்களை வதைத்து, அவரவர் தாய்மொழியையும் மாநில உரிமைகளையும் நசுக்கி, பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டு உணர்வுகளை ஒடுக்கி, ஒரே நாடு-ஒரே மொழி-ஒரே தேர்தல்-ஒரே உணவு என்ற சர்வாதிகாரத்தனத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பவை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிற வாக்காளர்களும்தான்.

இந்த ஒற்றுமை உணர்வை ஒருமுகப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே, இந்திய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கான வழி என்பதால் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்கமாக திமுக திகழ்கிறது. திமுக பவள விழாவைக் கொண்டாடும் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், சமூகநீதி-மாநில உரிமை-பன்முகத்தன்மை கொண்ட வகையில் இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது என்றால் இது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.

வெற்றி – தோல்விகளைக் கடந்து லட்சியப் பாதையில் உறுதி குலையாமல் பயணிக்கின்ற இயக்கம் திமுக. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு, முதுகு வளையாமல், தரையில் தவழாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்று, ‘நான் திமுககாரன், நான் கலைஞரின் உடன்பிறப்பு’ என்று கம்பீரமாகச் சொல்கின்ற துணிவும் வலிவுமே திமுகவினரின் அடையாளம். அந்த கம்பீரத்துடன், அண்ணா கண்ட திமுக தனது 75வது ஆண்டினை-பவள விழாவினைக் கொண்டாட இருக்கிறது. அதுவும், கலைஞரின் நூற்றாண்டில். இதைவிட என்ன மகிழ்ச்சி நமக்கு இருக்க முடியும்?.

பெரியார், அண்ணா- திமுக பிறந்த செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவினைச் சிறப்பாக நடத்தி, கொள்கை முழக்கம் செய்யும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், கட்சிக்காக பாடுபட்ட லட்சிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி, சிறப்புரை ஆற்றுவது கலைஞர் உருவாக்கிய நடைமுறை- நன்முறை. இனமானப் பேராசிரியரும் திமுகவின் முன்னோடிகளும் கலைஞருக்கு உறுதுணையாக இருந்து முப்பெரும் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவார்கள். இளைஞரணி சார்பில் பெருமைமிகு பேரணிகளை நடத்தியதையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.

தலைவர் கலைஞரின் வழியில் இந்த ஆண்டும் கழகம் காத்த லட்சிய வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரியார் விருது மயிலாடுதுறை சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க.சுந்தரத்துக்கும், கலைஞர் விருது துணைப் பொதுச்செயலாளர்- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது பெங்களூரு ந.இராமசாமிக்கும் செப்டம்பர் 17ம் அன்று வேலூர் மாநகரில் நடைபெறவுள்ள திமுகவின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் வழங்கப்படும். திமுகவின் வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களுக்கான விருதுகளும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட இருக்கின்றன.

வீரம் செறிந்த வேலூரின் அடையாளமாக கோட்டை இருப்பதுடன், வேலூர் எப்போதும் திமுகவின் கோட்டைதான் என்பதைப் பல்வேறு களங்களில் நிரூபித்திருக்கிறது. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் நமக்கு வழங்கியுள்ள கோட்டை. கொள்கைத் தடம் மாறாமல் பயணிக்கின்ற பொதுச் செயலாளரின் தலைமையில் வேலூரில் முப்பெரும் திருவிழா- திமுக பவள விழா நடைபெறுகிறது. விழாவிற்கான பணிகளை மாவட்ட செயலாளர் நந்தகுமாரும் திமுக நிர்வாகிகளும் இணைந்து சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு தொடக்கமும், திமுகவின் பவள விழா தொடக்கமும் இணைந்த இந்த ஆண்டில், வேலூரில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு உடன்பிறப்புகளாம் உங்களை அழைப்பதில் உங்களில் ஒருவனான நான் அகம் மிக மகிழ்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கைப் படையாகத் திரண்டு வருக.

கழகம் காப்போம் – மொழியைக் காப்போம் – மாநில உரிமை காப்போம் – மக்கள் வாழும் வகையில் நாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் தருக. நாற்பதும் நமதே-நாடும் நமதே என்ற இலக்கை அடைந்திடச் சூளுரைக்கும் விழாவாக வேலூர் முப்பெரும் விழா அமையட்டும். அடுத்த ஆண்டு, கலைஞர் நூற்றாண்டு நிறைவும்- திமுக பவள விழா நிறைவும் வெற்றிக் கொண்டாட்டங்களாக மலரட்டும்.

*‘இந்தியாவை காப்போம்..’

முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநில கட்சியால் அந்த மாநிலத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திய நம் கழகம், கலைஞரின் நூற்றாண்டில் 75ம் ஆண்டில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. வீரம் செறிந்த வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கை படையாக திரண்டு வருக. கழகம் காப்போம். மொழியைக் காப்போம். மாநில உரிமை காப்போம். மக்கள் வாழும் வகையில் இந்தியாவைக் காப்போம்.

இவ்வாறு கூறியுள்ளார்.