டெல்லி:  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி,  தந்தை ராஜீவ்காந்தி யின் தொலைநோக்கு பார்வை என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கும் வகையில்  டிவிட் பதிவிட்டு, வீடியோவுடன் பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளார் ராகுல்காந்தி.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த ராஜீவ் காந்தி  விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மறைந்து  இன்று 31 ஆண்டுகள் ஆகிறது. அவரது 31ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி , பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், ராஜீவ் நினைவுநாளையொட்டி, அவரது மகனும், எம்.பி.யுமான  ராகுல் காந்தி உருக்கமாக டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை, அவர் மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார்.

நான் அவரை இழந்து வாடும் இந்த வேளையில் அவருடன் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தை அன்புடன்  எண்ணி நினைத்து பார்க்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ராகுல்காந்தியின் தொலைநோக்கு பார்வை தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.