இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத இளம் தலைவன்..
நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
கவல் தொழில்நுட்ப புரட்சி, பஞ்சாயத்து ராஜ், 18 வயதினருக்கு வாக்குரிமை, கட்சித்தாவல் தடைச் சட்டம். உயர்கல்வி சீர்திருத்ததிற்காக புதிய தேசிய கல்விக்கொள்கை – என நன்றாகத்தான் போனது ராஜீவ்காந்தியின் ஆட்சி..
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் உறவை மேம்படுத்துவதில் அவருக்கு தனி ஆர்வமே இருந்தது ஆனால் இன்னொரு பக்கம், தாய் இந்திரா படுகொலைக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியதால் கிடைத்த ஒரு வகையான மிதப்பு, அடிக்கடி ராஜீவை ஆட்டிப்படைக்கத் தவறவேயில்லை..
போபர்ஸ் ஊழல் போன்றவற்றில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்ட ராஜீவ், சகட்டு மேனிக்கு மத்திய அமைச்சரவை மாற்றத்தை நடத்தியதும் அதுவரை இந்தியா காணாத ஒன்று..
சீனியர் தலைகளை அவர் தூக்கியடித்த விதம், மன்னர் பரம்பரரைக்கு நிகரான மனநிலையை காட்டியது… நாற்பதே வயதில் பிரதமரான அவருக்கு இப்போக்கு தனங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு நாட்டை அடுத்தடுத்த தலைமுறைக்காக சிந்திக்கும் தொலைநோக்கு பார்வை அதிகமாகவே இருந்தது.
மீண்டும் பிரதமராகி பதவியில் அமரும் வாய்ப்பு கிடைத்திருந்தால் என்னென்ன செய்திருப்பார், எவற்றிற்கெல்லாம் பரிகாரம் கண்டிருப்பார் என்ற நிலை, கைக்கு வரும்முன்பே தாயைப் போலவே மகனையும், இழுத்துக்கொண்டது படுகொலை. அதுவும் வெறும் 46 வயதிலேயே என்பதுதான் இன்னும் கொடுமை.
தன்னை செதுக்கிக் கொள்ளும் வேலையில்,இந்தியா இழந்த ஒப்பற்ற தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ராஜீவ் காந்தி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் இன்று