டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்பில் 1,456 இடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளிகளுக்கு மத்தியில்  நடைபெற்று வருகிறது. நேற்றைய அமர்வில், முதுநிலை மருத்துவப்படிப்பு தொடர்பான உறுப்பினரின்  கேள்விகளுக்கு எழுத்து மூலம் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பதிலளித்தார்.

அதில், ‘2021-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஒரு சிறப்பு சுற்று உள்பட 5 சுற்று கலந்தாய்வை மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நடத்தியது. ஆனாலும் 1,456 இடங்கள் காலியாகவே உள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை காலியாக இருந்த இடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கே மாற்றப்பட்டன’ என தெரிவித்தார்.

மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவு இணை மந்திரி முரளீதரன், அண்டை நாடுகள் உள்பட வெளிநாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள கடன் விவரங்களை  தெரிவித்தார்.. அந்தவகையில் 14.27 பில்லியன் டாலர் மதிப்பிலான 37 கடன் வரையறை திட்டங்களை வங்காளதேசம், மாலத்தீவு, மியான்மர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு வழங்கியிருப்பதாக முரளீதரன் தெரிவித்தார்.  இதைப்போல 14.07 பில்லியன் டாலர் மதிப்பிலான மேலும் 222 கடன் வரையறை திட்டங்களை 42 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.