டில்லி

றைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகனத்தின் போது 11  பேரின் மொபைல் போன் திருடப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 24 ஆம் தேதி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 25 ஆம் தேதி அன்று டில்லியிலுள்ள நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏராளமானோர் வந்திருந்தனர்.

அவர்களில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ மற்றும் பதஞ்சலி நிறுவன செய்தி தொடர்பாளர் திஜார்வாலா ஆகியோரும் அடங்குவர்.  அப்போது சுப்ரியொ மற்றும் திஜார்வாலா உள்ளிட்ட 11 பேர் மொபைல் போன் திருடப்பட்டுள்ளன. இது குறித்து திஜார்வாலா டிவிட்டரில் பதிந்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இது குறித்த புகார் இன்னும் வரவில்லை என தெரிவித்துள்ளனர்

அந்த பதிவில் அவர், “நாங்கள் அனைவரும் அருண் ஜெட்லிக்கு இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தோம். அப்போது எனது மொபைல் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த போன் என்னிடம்  இருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டது.” எனப் பதிந்தார். தனது பதிவில் டில்லி காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இணைத்துள்ளார்.