கும்பகோணம்

நேற்று மாலை கும்பகோணம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 1000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமாகின.

அண்மைக் காலமாகக் கும்பகோணத்தில் அக்னி நட்சத்திர வெயிலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர். நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.   காவலர் குடியிருப்பில் உள்ள மரம், காசிவிஸ்வநாதர் கோயில் பிரகாரத்திலுள்ள ஷேத்திரமகாலிங்கம் அருகிலிருந்த 100 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் இதனால் அடியோடு சாய்ந்தது. கும்பகோணம், மகாமக குளம் கீழ் கரையிலுள்ள அபிமுகேஸ்வரர் கோயிலின் தெற்குப் புற மதில் சுவரிலிருந்த நொன்னா மரம் விழுந்ததில், அப்பகுதி சேதமடைந்தது.

கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளிலுள்ள 1000-கும் மேற்பட்ட வாழை, கரும்பு, தென்னை மட்டைகள், 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன. இதனையடுத்து, மின்கம்பங்கள் சில மணி நேரத்திற்குள் சீர் செய்யப்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழை மரம் சாகுபடி செய்யும் விவசாயி,

”கும்பகோணம் ஆலையடி சாலையில் சுமார் 2 ஏக்கரில் வாழை மரம் சாகுபடி செய்துள்ளேன். திருமணம் மற்றும் விஷேச சுபநிகழ்ச்சிக்காக மட்டும் சாகுபடி செய்வதால், அதில் தார், பூ பாதுகாப்புடன் வரை வளர்த்து, அதன் பின்னர், தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கப்படும். 

இந்நிலையில் தொடர்ந்து சுபமுகூர்த்த நாள் இருப்பதால், விற்பனைக்காக வைத்திருந்த தார், பூவுடன் இருந்த சுமார் 1000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன.

ஒரு வாழை மரம் ரூ. 500 விற்பனை செய்து வரும் நிலையில், பலத்த காற்றினால் ரூ.5 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல் வாழைத் தோப்புகளிலுள்ள மரங்கள் சாய்ந்துள்ளதால், வரும் சுபமுகூர்த்த நாட்களில் வாழைமரத்தின் விலை அதிகரிக்கும்”

எனத் தெரிவித்தார்.