மும்பை:
கூட்டணியில் தொடரும் கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். அதேநேரம், வெளியேறும் கட்சிகளை தோற்கடிப்போம்  என  பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷா எச்சரித்தார்.


மகாராஷ்டிர மாநிலம் லத்தூர், ஓஸ்மனாபாத்,ஹிங்கோலி மற்றும் நான்டேன் மாவட்டங்களில் பாஜக ஊழியரகள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமீத்ஷாவும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஷு கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமீத் ஷா, கடந்த 2014 மக்களவை தேர்தலில் உத்திரபிரதேசத்தில் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்தால் கூட நாங்கள் 74 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
கூட்டணி கட்சி (சிவசேனா) கூறும் எதிர் கருத்துகள் குறித்து குழப்பமடைய வேண்டாம். கூட்டணியில் தொடரும் கட்சிகளை வெற்றி பெறச் செய்வோம். அதேசமயம், கூட்டணியிலிந்து வெளியேறும் கட்சிகளை தோல்வியடைச் செய்வோம். அதற்கேற்றாற்போல் கட்சியினர் கூடுதல் வலிமையுடன் பணியாற்ற வேண்டும்.
மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 40 தொகுதிகள் நமது இலக்காக இருக்க வேண்டும். இம்முறை நாம் வெற்றி பெற்றால், நமது ஆட்சி இன்னும் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றார்.

இதனையடுத்து, 40 தொகுதிகளில் வெற்றி பெற அமீத்ஷா இலக்கு நிர்ணயித்ததையடுத்து, கட்சி ஊழியர்களுடன் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தினார்.
பாஜகவுக்கு எதிராக சிவசேனா தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில், முதல்முறையாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியினர் கூறும்போது, எத்தகைய சவாலையும் ஏற்க சிவசேனா தயாராக உள்ளது. இந்துத்வா, ராமர் கோயில் விவாகாரம் குறித்து பேசினால் பாஜகவுக்கு கோபம் வருகிறது. 40 தொகுதிகள் இலக்கு என்று அவர்கள் கூறுவதைப் பார்த்தால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என்றனர்.