விமான நிலையங்களைப்போல் ரெயில் நிலையங்களிலும் 20 நிமிடங்கள் முன்பே வர வேண்டும்

Must read

டில்லி

விமான நிலையங்களில் உள்ளதை போல் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு கருதி பயணிகள் முன்கூட்டியே வர வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விமான நிலையங்களில் பாதுகாப்பு காரணமாக பயணிகள் விமானம் கிளம்புவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்பே வர வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.    பயணிகளின் லக்கேஜுகள் சோதனைக்கு அனுப்பப் பட்டு மற்றும் போர்டிங் பாஸ்கள் பெறப்படுவது உள்ளிட்ட பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரெயில்வே இதே போல பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   இது குறித்து ரெயில்வே பாதுகாப்புப் படை பொது இயக்குனர் அருண்குமார், “ரெயில்களில் பயணம் செய்வோர் பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் உள்ளது போல புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப் பட உள்ளன.  இந்த விதிமுறைகள் கும்ப மேளாவை ஒட்டி அலகாபாத் நகர் ரெயில்வே நிலையத்தில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது.

இதே நடைமுறைகள் மேலும் 202 நிலையங்களில் முதற்கட்டமாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.    ரெயில்வே நிலையங்களை முழுவதுமாக அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   முதலில் எத்தனை வழிகள் திறந்திருக்க வேண்டும் என்பதும் எத்தனை மூடப்படவேண்டும் என்பதும் கண்டறியப்பட உள்ளன.   இதில் ஒரு சில பகுதிகளில் சுவர் எழுப்பப்படும்.  ஒரு சில பகுதிகளில் மூடக்கூடிய கதவுகளும் காவலர்களும் அமர்த்தப்படுவார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் சீரற்ற (எப்போதாவது) சோதனைகள் நடக்கும்.   இந்த சோதனைகளால் பயணிகள் ரெயிலை தவற விடாமல் இருக்க அவர்களை 15-20 நிமிடங்கள் முன்னதாக வர வேண்டும்.   இதனால் பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை.   தொழில் நுட்ப வளர்ச்சியால்  குறைந்த காவலர்கள் மூலமே பணியை முடிக்க முடியும்.

இதற்காக ரூ.385.06 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த பாதுகாப்பு சோதனை படிப்படியாக செய்யப்பட்டு ரெயிலில் பயணிகள் ஏறும் முன்பே முடிந்து விடும்படி அமைக்கப்படும்.   அதுவும் நெரிசல் நேரங்களில் மேலும் நெரிசலை தவிர்க்கவே பயணிகள் முன்னதாக வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article