கோவில்பட்டி

திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்துள்ள இலவசத் திட்டங்கள் அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஐந்து முனை போட்டி உள்ளது.  திமுக, அதிமுக, மநீம, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. அனைத்து அணிகளும் தற்போது தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.   இன்று பல முக்கிய தலைவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

அவ்வகையில் கோவில்பட்டியில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.  அவர் நேற்று செய்தியாளர்களிடம், “அதிமுக அரசு இலவசங்கள் தருகிறேன் என மக்களை ஏமாற்றுவதைவிட அவர்கள் சுயமாகச் சம்பாதிக்க வழிவகை செய்ய வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

வருங்கால தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்

எங்கள் அமமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளோம், அத்துடன் மது ஆலைகளையும் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்துள்ளோம் எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ள 100 திட்டங்களில் பூரண மதுவிலக்கு முக்கியமான திட்டமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.