டெல்லி: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கூறுவது சரியானது அல்ல  என காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில்  பங்கேற்ற  காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினித்குப்தா கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் (சி.டபிள்யு.ஆர்.சி.) 95-ஆவது கூட்டம்  நேற்று ( ஏப்ரல் 30ந்தேதி) காணொலி காட்சி முலம் நடைபெற்றது. காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் உறுப்பினர்கள் ஆர். சுப்பிரமணியன் (காவிரி தொழில் நுட்பக் குழு), எம். சுப்பிரமணியன், (தமிழக அரசின் தலைமைப் பொறியாளர்), கலந்துகொண்டனர். கர்நாடக மாநில அரசு சார்பில்,   மாநில உறுப்பினர் மகேஷா (எம்.டி. காவிரி நீரவாணி நிகம்) , கேரள மாநில அரசு சார்பில், அம்மாநில உறுப்பினர் பிரியேஷ், புதுச்சேரி  மாநிலம் சார்பில்,  தலைமைப் பொறியாளர் கே.வீரசெல்வம், மத்திய நீர்வள கோவைப்பிரிவு தலைமைப் பொறியாளர், இந்திய வானிலை ஆய்வுத் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை, அங்குள்ள அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, பெங்களூருவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், காவிரில் இதுவரை தமிழ்நாட்டுக்கு திறந்த விடப்பட்ட தண்ணீர்,  தமிழ்நாட்டுக்கு கிடைத்த தண்ணீர் அளவுக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய  பேசிய தமிழக உறுப்பினர், பிலிகுண்டுலுவில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 -ஆம் தேதி வரையில் பெறப்பட்ட நீர் அளவு 2.5 டிஎம்சி. ஆனால், தரப்படவேண்டிய நீர் அளவான 7.5 டிஎம்சியில் 5 டிஎம்சி வரை பாக்கி உள்ளது என்றவர்,   தற்பொழுது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளிலும் (சுமார் 25 டிஎம்சி) தண்ணீர் இருப்பு போதுமானதாக உள்ள நிலையில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஒட்டங்களுக்குத் தேவைக்கு (சுற்றுச்சூழல் குறைபாட்டு நீர்) பிலிகுண்டுலுவில் நிகழ் மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால், இதற்கு கர்நாடக மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், தற்போது அணைகளில் உள்ள தண்ணீரை வைத்து குடிநீர் தேவை மட்டுமே சமாளிக்கப்பட்டு வருகிறது. அதனால், மேலும் தமிழகத்திற்கு தண்ணீர்  தர முடியாது என்றார்.

 இந்திய வானிலை ஆய்வுத் துறை உறுப்பினரும், கர்நாடகத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக, “பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 -ஆம் தேதி வரை கோடைகால பருவ மழை இயல்பைவிட மிகக் குறைவாகவே பெய்துள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கும் காவிரிப் படுகையில் வறட்சியான வானிலையே நிலவும்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக விவாதங்கள் முடிந்த பிறகு பேசிய   குழுவின் தலைவர் வினீத் குப்தா, “வரும் மே மாதத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவையான 2.5 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகம் வழங்க பரிந்துரைக்கிறோம். அதே சமயத்தில் கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விட கூறி உத்தரவிடுவது சரியான அறிவுரையல்ல.

தற்போது அங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், சரியான பயன்பாட்டிற்கு சென்றடையாது. தற்போது பாசனத் தேவையும் இல்லை. இதனால், இரு மாநிலங்களிலும் இருப்பு நீரை குடிநீர் மற்றும் சுற்றுப்புறச் சூழல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், “காவிரி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மே 16- ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிலைமையை மீண்டும் ஆராயப்படும்’ எனவும் அவர் தெரிவித்தார்.