திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அனைவராலும் அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.  இங்கு பரந்து விரிந்த ஏரி, சூசைட் பாயிண்ட், மலர் பூங்கா, மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. காடுகளில் காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இங்கு நிலவும் குளிர்ச்சியான சூழல் காரணமாக, தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் ஆர்வமுடன் கொடைகானலுக்கு வருகை புரிகின்றனர். அவர்கள் இங்குள்ள சுற்றுலா இடங்களையும், இயற்கையின் அழகையும் ரசித்துவிட்டு செல்கின்றனர். இங்குள்ள பைன் மரக்காடுகள், குணா குகை, மோயர் பாயிண்ட்,பேரிஜம் உள்ளிட்ட பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடியவை. இந்த சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல வனத்துறையின் அனுமதி சீட்டு பெற வேண்டும்.

தற்போதைய கடும் வெயில் காரணமாக, ஏராளமானோர் குளிர்ச்சி பிரதேசமான கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அங்குள்ள சாலைகள் மட்டுமின்றி பல பகுதிகளிலும் மக்கள் நெரிசல் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மத்தியில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுள்ளதால் மேலும் கெடுபிடிகளால் சுற்றுலா பயணிகள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலால்  அங்கு வசிக்கும் மக்கள் தங்களது அவசர தேவைக்கு வெளியே வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்ல முடியவில்லை என்று கோபமடைகின்றனர்.  வீட்டுக்கு போக 2-3 மணி நேரமாகுது என, இதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (முதல்வரின் குடும்பம் அந்த பகுதிக்கு செல்ல இருப்பதால் , பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது)

ஏற்கனவே உயர்நீதிமன்றம், இ-பாஸ் முறையில்தான் கொக்கானல்  மற்றும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது வனத்துறையின் திடீர் தடையும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், முதல்வரின் கொடைக்கானல் பயணம் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த  2015 ஆம் ஆண்டு மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடநாடு சென்ற பொழுது கருணாநிதி அவர்கள் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார் . “கும்பி எரியுது குடல் கருகுது ” “கோடநாடு ஒரு கேடா ?… இப்பொழுது ஸ்டாலின் அவர்கள் கொடைக்கானல் சென்றுள்ளார் . அதே வசனம் முதல்வர் ஸ்டாலினுக்கும் பொருந்தும் தானே… என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.