டில்லி

ங்கில புத்தாண்டுக்கு முதல் நாள் ஒரே நாளில் சொமோட்டோ ஊழியர்களுக்கு ரூ.97 லட்சம் டிப்ஸ் பெற்றுள்ளனர்.

இந்திய உணவு விநியோக சந்தையில் சோமோட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்தமான உணவுகளைப் பிடித்த ஓட்டல்களில் இருந்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் இந்த செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு பல பில்லியன்களை தாண்டியுள்ளது. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டெலிவரி மேன்களாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் காலை முதல் இரவு வரை தங்கள் பைக்குகளில் உணவு பொட்டலத்தை வைத்துக்கொண்டு வேகமாகச் செல்வதைக் காண முடியும்.

இவ்வாறு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பலரும் டிப்ஸ் ஆகக் கூடுதல் பணத்தைக் கொடுத்து வருகின்றனர். மேலும் உணவு ஆர்டர் செய்யும் செயலிகள் மூலமாகவே டிப்ஸ் பணத்தையும் கொடுக்கும் வசதி உள்ளது. இவ்வாறு வாடிக்கையாளர்கள் கூடுதலாகக் கொடுக்கும் பணம் முழுவதுமாக டெலிவரிமேன்களுக்கே உணவு விநியோக நிறுவனங்கள் கொடுக்கின்றன.

ஆங்கில புத்தாண்டுக்கு முந்தைய நாளில் (டிசம்பர் 31 ஆம் தேதி) டிப்ஸ் தொகையாக மட்டும் 97 லட்ச ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் அளித்து இருப்பதாக சோமோட்டோ நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த தகவலைத் தனது எக்ஸ் தளத்தில் சோமோட்டோ நிறுவனர்களில் ஒருவரான தீபந்தர் கோயல் பகிர்ந்துள்ளார்