பெங்களூரு

நேற்று பெங்களூருவில் பெய்த கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் போதிய மழை பெய்யாமல் இருந்து வந்தது.  ஆனால் பெங்களூருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து சாரல் மழை பெய்து நேற்று காலை முதல் சூரியனே தென்படாத வகையில் இருள் சூழ்ந்து காணப்பட்டது.  குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

அதிகாலை முதல் நகரின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்து சிறிது நேரத்தில் நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. மழையால் பல பகுதிகளில் தாழ்வான சாலைகள், சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ராஜாஜி நகர், யஷ்வந்தபுரம், ஹெப்பால், கே.ஆர்.புரம், தேவனஹள்ளி, கே.ஆர்.மார்க்கெட், கெங்கேரி, எம்.ஜி.ரோடு, எச்.எஸ்.ஆர். லே-அவுட், ஹெப்பால், கே.ஆர். சர்க்கிள், மைசூரு சாலை, ஒகலிபுரம், அல்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மேலும் பெல்லந்தூர் வெளிவட்ட சாலை, ஈகோ ஸ்பேஸ் பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் ஆறுபோல் மழைநீர் பாய்ந்தது.

ஹெப்பால் பகுதிகளில் பெய்த கனமழையால் விமான நிலையம் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவித்தன. நேற்று பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதைப் பார்க்க முடிந்தது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் வரை கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சீதோஷ்ண நிலை மாறி மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் பெங்களூரு வாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.