பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்றக்கோரி, அவரது பாஜக கட்சியிலேயே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளதால், எடியூரப்பா விரைவில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாக தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில நகராட்சித்துறை அமைச்சராக மூத்த உறுப்பினர் ஈஸ்வரப்பா இருந்து வருகிறார். இருவருக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதனால், பல எம்எல்ஏக்கள் ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவாக, எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் அங்கு அவ்வப்போது எழுவதும், பின்னர் எடியூரப்பாவுக்கு மடாதிபதிகள் ஆதரவு தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

தற்போதும், அதுபோல எடியூரப்பாவுக்கு எதிராக உள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே எடியூரப்பாவுக்கு எதிராக பேசிவருகின்றனர். முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதையடுத்து பாஜக மேலிடம் அழைத்தன்பேரில், கடந்த  வெள்ளிக்கிழமை (ஜூலை 16) முதலமைச்சர் எடியூரப்பா திடீரென டெல்லி பறந்தார்.அஙகு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தொடர்ந்து அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  உள்பட கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அவரது சந்திப்பு மேகதாது அணை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. எடியூரப்பாவும்,  “நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரவியுள்ளன. நான் பதவி விலக மாட்டேன்” என கூறினார்.

ஆனால், கட்சி மேலிடம் எடியூரப்பாவை பதவி விலக வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.  கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா  வருகிற 25ஆம் தேதி அனைத்து கட்சி நண்பர்களுக்கும் விருந்து கொடுப்தாக அழைப்பு விடுத்துள்ளார். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  எடியூரப்பா  வரும் 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன் என்றும், கட்சி மேலிடம் கட்டளையிட்டால் முதல்வர் பதவியை துறப்பேன் என்றும் கூறி உள்ளார்.

இதனால்,  வருகிற 26ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கர்நாடக முதலமைச்சராக பி.எஸ். எடியூரப்பா இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.