இந்தியா : சாம்சங்கை பின் தள்ளிய ஸ்மார்ட் ஃபோன் ஜியோமி

Must read

டில்லி

டந்த சில வருடங்களாக இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.     தற்போது ஸ்மார்ட் ஃபோன் இல்லாத ஒரு இந்தியரை பார்ப்பதே அரிதாகி வருகிறது.    அப்படியே யாராவது இருந்தாலும் அவரை ஏதோ வேற்றுக் கிரக வாசியைப்  பார்ப்பது போல மக்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் வரிசையில் பல நிறுவனங்கள் கால் பதித்துள்ளன.   ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் தான் விற்பனையில் முன்னோடிகள் எனவும் விளம்பரம் செய்து வருகின்றன.   ஆனால் விளம்பரத்துக்கும் உண்மைக்கும் வெகு தூரமாக உள்ளது.    இதுவரை வாடிக்கையாளர்களின் அதிக விருப்பம் உள்ள ஸ்மார்ட் ஃபோனாக விளங்கிய சாம்சங் தற்போது பின் சென்றுள்ளது.

இப்போது அதிக விற்பனை ஆகும் ஸ்மார்ட் ஃபோன் ஜியோமி என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   சென்ற வருடம்  இந்தியாவில் விற்பனையான ஸ்மார்ட் ஃபோன்களில் 24% ஜியோமி எனவும் சாம்சங் 23% எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   லெனோவா, ஒப்போ, விவோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.    இதற்கு முந்தைய வருடத்தில் சாம்சங் முதலிடத்தை பிடித்திருந்தது

குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் ஜியோமி இருப்பதால் முதலிடத்துக்கு வர முடிந்ததாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.   அதே நேரத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு சமமாக ஜியோமியும் பிரத்யேக விற்பனை மையங்களை துவங்கியதும் மற்றொரு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.   ரூ, 15000 க்கு கீழ் விலையுள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் அதிக வசதிகள் கொண்ட ஜியோமிக்கு இணையாக சாம்சங் இல்லை என்பதே முக்கிய காரணம் என உபயோகிப்போர் தெரிவிக்கின்றனர்.

முதலிடத்துக்கு மீண்டும் முன்னேற சாம்சங் நிறுவனம் பல உத்திகளை கையாண்டு வருகிறது.   ஆன்லைன் வர்த்தகத்திலும்,  கடைகளிலும் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்கள் தடையின்றி கிடைக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.   அத்துடன்  ஜியோமியை விட குறைவான விலையில் அதை விட அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதற்குப் பிறகு சாம்சங் மீண்டும் முதலிடம் பெற வாய்ப்புள்ளதாக வர்த்தக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

More articles

Latest article