சிறுவன் சுர்ஜித்தை மீட்பதற்காக பயன்படுத்தப்படும் ரிக் இயந்திரம், வலுவான பாறைகள் காரணமாக தொடர்ந்து 2வது முறையாக பழுதடைந்த நிலையில், அவை உடனடியாக சரிசெய்யப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்ததான். சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், புதிய ரிக் இயந்திரம் மூலம் சிறுவன் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 90 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணி நள்ளிரவு 12 மணி முதல் நடைபெற்று வருகிறது. அதிகாலை 4.30 மணிக்கு இந்த இயந்திரத்தின் பல்சக்கரம் பழுதடைந்த நிலையில், அது வெல்டிங் செய்யப்பட்டு சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு மீண்டும் பல்சக்கரத்தில் 2 பற்கள் உடைந்து பழுது ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்த ஊழியர்கள், தொடர்ந்து மீட்பு பணிகளை விரைந்து நடத்தி வருகின்றனர். மேலும் இன்னும் 1 மணி நேரத்திற்கு பொதுமக்களும், ஊடகத்தினரும் பொறுமை காக்கும் படி அறிவுருத்தியுள்ள அதிகாரிகள், கடுமையான பாறைகளை தாண்டி இனி இயந்திரம் குழியை தோண்டும் என்பதால், இயந்திரத்தின் பலம் இனி வரும் 1 மணி நேரத்தில் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

40 அடி வரை வலுவான பாறைகள் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து வலுவான பாறைகள் இருப்பதால், தொடர்ந்து இயந்திரம் பழுதடைவதும், பழுது நீக்கிய பின் மீண்டும் மீட்பு பணிகள் தொடர்வதுமாக உள்ளது. இதனால் மீட்பு பணிகள் தாமதம் அடைந்து வருகின்றன.