ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள வந்த நடிகர் தாமு, அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தது அங்கிருப்பவர்களிடம் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 62 மணி நேரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு தோல்வியடைந்த நிலையில், தற்போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு 2 மீட்டர் அருகில் மற்றொரு குழி 90 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு வருகிறது. கடந்த 22 மணி நேரமாக இப்பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது மழை குறுக்கிடுவதாலும், ரிக் இயந்திரத்தில் ஏற்படும் பழுதாலும் இப்பணிகள் தாமதம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இப்பகுதிக்கு வந்த நடிகர் தாமு, சுஜித் நிலை குறித்தும், மீட்பு பணிகள் குறித்த நிலை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகளின் அனுமதியை பெற்று, குழி தோண்டப்படும் இடத்திற்கு சற்று தூரத்தில் அமர்ந்து அமைதியான முறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், சுர்ஜித்தின் பெற்றோர், அக்கிராம மக்கள் என பலரும் பதற்றத்துடன் சோகமான மனநிலையில் இருந்த சூழலில், தாமு பிரார்த்தனை மேற்கொண்டது அங்கிருப்பவர்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.