நொய்டா

நொய்டாவில் உள்ள சாம்சங் மொபைல் தொழிற்சாலையில் இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுதலுக்காக மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை அமல் படுத்தப்பட்டுள்ளது.  கொரோனா தாக்கத்தின் அளவைப் பொறுத்து ஊரடங்கு விதிகளைத் தளர்த்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுரை அளித்தது.

இந்த அடிப்படையில் பல மாநில அரசுகள் தொழிலகங்களைக் குறைந்த எண்ணிக்கை தொழிலாளர்களுடன் இயக்க அனுமதி அளித்தன.  அவ்வகையில் உத்தரப்பிரதேச அரசு நொய்டாவில் அமைந்துள்ள சாம்சங் மொபைல் தொழிற்சாலை இயங்க அனுமதி அளித்துள்ளது.  அதையொட்டி இன்று சாம்சங் மொபைல் தொழிற்சாலையில் இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த பார்த்தா கோஷ, “மாநில அரசின் விதிமுறைகளுக்கு இணங்க எங்கள் நொய்டா தொழிற்சாலை பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  மொத்த ஊழியர்களான 10000 பேரில் தற்போது 30 சதவிகித ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன்ர்.   இவர்கள் பேருந்துகள் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தற்போது இரு ஷிப்டுகள் பணி நடக்க உள்ளது. ஷிப்டுக்ளுக்கு இடையில் சமூக இடைவெளி விதிகளின்படி ஒரு மணி நேர வித்தியாசம் உள்ளது.   அடுத்த சில வாரங்களில் மேலும் 3000 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.   தற்போது கைவசம் உள்ள உதிரிப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி தொடங்க உள்ளது. “ எனத் தெரிவித்துள்ளார்.