நாடாளுமன்றத்தில் மகளிருக்கு சமஉரிமை மறுக்கப்படுவதாக மக்களவையில் பேசிய பாஜக பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதி மக்களவை உறுப்பினரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான ஜஸ்கவுர் மீனா-வின் இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர் “மக்களவையில் கூட பெண்கள் சமமாக நடத்தப்படுவதில்லை” என்றார். “நாங்கள் காலையிலிருந்து இங்கே அமர்ந்திருக்கிறோம், ஆனால் எங்களுக்கு பேச அனுமதி வழங்கப்படவில்லை”

“சத்ய பால் சிங் மற்றும் ரவிசங்கர் பிரசாத் போன்றவர்களுக்கு பேசுவதற்கு நீண்ட நேரம் வழங்கப்படும் நிலையில் எங்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்கப்படுவதில்லை.

பெண் உறுப்பினர்களை கடைசியாக பேச அழைப்பதை நிறுத்திக்கொண்டு அவர்களை 2வது அல்லது 3வதாக பேச அழைப்பு விடுக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

முன்னதாக, சங்கீதா குமாரி சிங் தியோ மற்றும் சுனிதா துகல் ஆகிய இரண்டு பாஜக உறுப்பினர்களும் மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் குறித்து பேச போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நாடாளுமன்ற ஊடுருவல், பாதுகாப்பு குறைபாட்டை மறைக்க அதுகுறித்து கேள்வியெழுப்பிய எம்.பி.க்கள் சஸ்பெண்ட் என்று பரபரப்பாக இருந்து வரும் நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் மக்களவை சபாநாயகரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.