கர்நாடக மாநிலம் மங்களூரை அடுத்த நிடோடி என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில் சிறுத்தை குட்டி தவறி விழுந்து சிக்கிக் கொண்டது.

கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல்தந்ததை அடுத்து சிறுத்தையை மீட்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வனவிலங்குகளை மீட்பதில் தேர்ச்சி பெட்ரா கால்நடை மருத்துவர்களின் உதவியை நாட முடிவெடுத்தனர்.

அதற்காக சிட்டே பில்லி ஆராய்ச்சி மற்றும் மீட்பு மையத்தை தொடர்பு கொண்டனர். அங்கிருந்து மருத்துவர் மேகனா, மருத்துவர் யாஷஸ்வி, மருத்துவர் ப்ரித்வி மற்றும் மருத்துவர் நபிஸா ஆகிய நான்கு பேர் கொண்ட மீட்புக் குழு பிப். 12 ஞாயிறன்று வரவழைக்கப்பட்டது.

30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை கிணற்றைச் சுற்றி பொதுமக்கள் சூழ்ந்து நின்றதைப் பார்த்து அச்சமுற்று கிணற்றுக்குள் இருந்த குழி போன்ற மறைவிடத்தில் சென்று அமர்ந்துகொண்டது.

கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றிய வனத்துறையினர் சிறுத்தையை மீட்பது குறித்து கால்நடை மருத்துவக் குழுவுடன் ஆலோசனையில் இறங்கினர்.

சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என்றும் அதற்காக இரும்பு கூண்டுக்குள் அமர்ந்து ஒருவரை கீழே இறக்க முடிவு செய்யப்பட்டது.

மருத்துவர்களுள் யார் கிணற்றுக்குள் இறங்குவது என்று யோசிப்பதற்கு முன்பே மருத்துவர் மேகனா கீழே இறங்க ஆயத்தமானார்.

மயக்க மருந்து மற்றும் அதனை செலுத்தும் துப்பாக்கி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தயாரான மேகனா நீண்டநாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்த துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒருமுறை பரிசோதித்துப் பார்த்துக்கொண்டார்.

அதற்குள்ளாக கிணற்றுக்குள் இறக்க இரும்பு கூண்டின் நாலாபக்கமும் கயிறு கட்டி தயாரானதை அடுத்து அதற்குள் ஏறி கிணற்றுக்குள் இறங்கினார்.

முதலில் கண்ணுக்கு புலப்படாமல் இருந்த சிறுத்தை கிட்டே செல்லும்போது கண்ணுக்குத் தென்பட்டது, ஒரு வயதே நிரம்பிய அந்த சிறுத்தை மீது மயக்கமருந்து இருந்த ஊசியை துப்பாக்கி மூலம் அதன் மீது செலுத்த அது அதன் தொடைப்பகுதியில் சென்று பாய்ந்தது.

மயக்க ஊசி சிரஞ்சை தனது பல்லால் கடித்து துப்பிய சிறிது நேரத்தில் மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் மயங்கி விழுந்தது.

சிறுத்தை சற்று கனமாக இருந்ததால் உள்ளூர் நபர் ஒருவரை கிணற்றுக்குள் இறக்கி அவரின் உதவியுடன் அதனை கூண்டுக்குள் ஏற்றிக் கொண்டு மேலே வந்து சேர்ந்தார் மருத்துவர் மேகனா.

கீழிருந்து மேலே வர சுமார் 10 நிமிடம் ஆன நிலையில் அதுவரை மயங்கிய சிறுத்தையுடன் கூண்டுக்குள் பயணம் செய்தது ஒரு திகிலான அனுபவமாக இருந்தது என்று மருத்துவர் மேகனா தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவம் பயின்றபோது விலங்குகளை மீட்பது மற்றும் அவற்றை அமைதிப்படுத்துவது குறித்து கல்லூரியில் படித்த அனுபவம் மட்டுமே இருந்ததாகவும் பின்னர் பணியில் சேர்ந்த பிறகு தான் ஒவ்வொன்றாக தான் நிஜத்தில் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்த மேகனா.

தனது குழுவில் இருந்த அனைவருமே வனவிலங்குகளை மீட்பதில் தேர்ந்த அனுபவம் உள்ளவர்கள் என்ற போதும் சிறுத்தையை இதுபோன்று பக்கத்தில் இருந்து தான் பார்த்ததில்லை என்பதாலேயே கிணற்றுக்குள் இறங்க தான் ஆர்வம் காட்டியதாக அவர் தெரிவித்தார்.

36 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அந்த சிறுத்தைக்கு எந்த விதமான எலும்பு முறிவோ காயமோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அதனை மயக்கம் தெளியவைத்து மீண்டும் காட்டிற்குள் விட்டனர்.

பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் சிறுத்தையை மீட்க 30 அடி ஆழ கிணற்றுக்குள் சிறு தயக்கமோ அச்சமோ இன்றி இறங்கியது அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.