சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன்  முற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில்,  காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகளை திமுக ஒதுக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பதவி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் – தி.மு.க இடையிலான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை, அண்ணா அறிவாலயத்தில்  நேற்று (ஜனவரி 28ந்தேதி) நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தை  நேற்று  மாலை 3 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில்  நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பில், அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக,  இதுதொடர்பாக,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்  ஆலோசனை நடத்தினர். அப்போது,  கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 8 தொகுதிகள், தோல்வி அடைந்த தேனி, மற்றும் கூடுதலாக 12 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகளை கேட்க வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதுபோல மற்றொரு தகவல் 14 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளதாகவும்,  அதாவது, கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுடன், தோல்வி அடைந்த தேனி மற்றும் கூடுதலாக திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம்  என மேலும் தொகுதிகளை ஒதுக்க கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மொத்தமுள்ள 40 தொகுதியில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதுபோல தொகுதிகளை திமுக ஒதுக்காது என்று தெரிந்திருந்தும், சில காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தியின் நடைபயணத்தில் மக்களிடையே காங்கிரஸ் செல்வாக்கு உயர்ந்துள்ளது என வலியுறுத்தி, அதிக இடங்களை கேட்க வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதற்கு திமுக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, திமுக தரப்பில், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 4 தொகுதிகள்தான் கொடுக்க முடியும்  என கூறப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது,  நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் தர முடியும் என கறாராக தெரிவித்த தாகவும், ஆனால், காங்கிரஸ் தரப்பில் கடந்தமுறை வெற்றிபெற்ற தொகுதிகளையாவது மீண்டும் தர வேண்டும் என வலியுறுத்தப் பட்டதாகவும், ஆனால்,  அதிக பட்சமாக 7 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சத்திய மூர்த்தி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், கூட்டணி தர்மத்தை மதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில், பேச்சுவார்த்தை குறித்த உண்மை நிலையை வெளியிடாமல்,  தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் எந்த வித பாட்டியலும் வெளியிடவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதுபோல செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, “திமுகவுடன் டெல்லியில் இருந்து காங்கிரஸ் தரப்பில் வந்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. 40 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுக-வை எப்படி வீழ்த்துவது என முதல்கட்ட பேச்சு வார்த்தையில் பேசப்பட்டது. மேலும் கூட்டணி கட்சிகளை எப்படி மகிழ்ச்சியாக வைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும்,  “21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்ற செய்தி பொய்யானது என்று மறுத்தார்.

ஆனால், செய்தியாளர்களோ, திமுக கூட்டணியில்   21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்த செய்தி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்துதான் வெளியானது என கூறி நிலையில், அதை மறுத்த கே.எஸ்.அழகிரி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், “காமராஜர் கட்டிய கட்டிடம் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் லீக் ஆகாது” டைமிங்காக பேசினார்.

இதைத்தொடர்ந்து மேலிட தலைவர்  முகில் வாஸ்னிக் கூறும்போது ,  திமுகவுடன் நடத்திய பேச்சு நிறைவாக இருந்ததாகவும்,  “கூடிய விரைவில் அடுத்தக்கட்ட சந்திப்பு நடைபெறும் என்றார்.

மேலும்,  இந்தியா கூட்டணி இன்னும் ஒவ்வொரு நாளும் வலுவாக தான் மாறி வருகிறது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இந்திய மக்கள் எங்கள் கூட்டணி பக்கம் தான் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது,  தி.மு.க. கூட்டணியில்   திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 10  தொகுதிகளும் (தமிழகத்தில் 9 + புதுச்சேரியில் 1), விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதியும்,  கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 1 தொகுதியும்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டது.

2019 நாடளுமன்றத் தேர்தலில் திமுக அங்கம் வகித்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. .அதற்கு முந்தைய 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தன்னிச்சையாக போட்டியிட்டு 38 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.