விழுப்புரம்: முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் இன்று  தீர்ப்பு  வழங்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அடுத்த விசாரணை ஜனவரி 31ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல்  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் அவருக்கு வாதாடுவதற்கு பலமுறை வாய்ப்பு அளித்தும் முன்வராத நிலையில் இறுதிவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், இன்றைக்கு (டிசம்பர் 29ந்தேதி)  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கண்டிப்பாக நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டுமென கூறிய நீதிபதி, வழக்கை ஒத்திவைத்திருந்தார். ஆஜராக பட்சத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கின் இன்றைய விசாரணைக்கு  ராஜேஸ் தாஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது மேல்முறையீட்டு வழக்கில்  தனது தரப்பு வாதங்களை முன்வைக்க  கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பூர்ணிமா,  அவருக்கு இரு நாள் அவகாசம் வழங்கியதடுன், ஜனவரி 31ம் தேதி கடைசி வாய்ப்பு என்றும்  அன்றைய தினம் வாதிடவில்லை என்றால், வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 3-ம் தேதி வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த  விசாரணையை வரும் 31ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

டந்த அதிமுக ஆட்சியில், அதாவது,  2021அம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ராஜேஸ்தாஸ் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான, வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்  தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் 16ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸை குற்ற வாளி என அறிவித்து, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தது. அத்துடன், ராஜேஷ்தாஸுக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்.பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வது மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடங்குவதற்காகவும் கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இன்று வாதாடுவதற்கு இறுதிக் கால அவகாசம் அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே  வழக்கு விசாரணையின் போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தரப்பு கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பூர்ணிமா, நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானமா? என சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், அவரது தரப்பு வாதங்களை முன்வைக்க பல முறை அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.