மும்பை:

மும்பையில் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அஜித்பவார் மீண்டும் தனது தாய்க்கட்சியான  தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். அவரை சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கட்டித்தழுவி வரவேற்றார். அதைத் தொடர்ந்து, இன்று அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.

மகாராஷ்டிராவில் கடந்த செப்டம்பர் மாதம் 21ந்தேதி நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அங்கு ஆட்சி அமைப்பதில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படாத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித்பவார் பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். இதனால் கடந்த சனிக்கிழமை (23-11-2019) அன்று காலை பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும்,   துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றனர்.

இந்த திடீர் நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தவைத் தொடர்ந்து, பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.

இதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் கோஷ்யாரி அழைப்பின் பேரில் நாளை உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித்பவார் நேற்று இரவு சரத்பவாரை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து கூறிய அஜித்பவார்,  தான் ஒருபோதும் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்றும்,  நான் NCP உடன் இருந்தேன், நான் NCP உடன் இருக்கிறேன், NCP உடன் இருப்பேன் என்று அதிரடியாக கூறினார். மேலும், கடந்த சில நாட்களாக  ஊடகங்கள் என்னைப் பற்றி தவறாகப் புகாரளித்துள்ளன, அதற்கு தகுந்த  நேரத்தில் நான் பதிலளிப்பேன் ”என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் 14-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கோலம்பர் கவர்னரால் நியமிக்கப்பட்டார். அவர் இன்று எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்புக்கு வந்த அஜித்பவாரை, சரத் பவாரின் மகளும், என்சிபி எம்.பி.யுமான சுப்ரியா சுலே கட்டித்தழுவி வரவேற்று அழைத்துச் சென்றார்.

அப்போது சுப்ரியா சுலே நிருபர்களிடம் கூறுகையில், “மிகப்பெரிய பொறுப்பு இந்த நாளில் வந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

என்சிபி மூத்த தலைவர்கள் அஜித் பவார், சாகன் பூஜ்பால், காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், பிரிதிவிராஜ், முன்னாள் சபாநாயகர் வால்சே பாட்டீல், பாஜகவின் ஹரிபாகு பாகடே உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் முதலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அஜித் பவார் பதவி ஏற்று முடித்தபின் அனைத்து என்சிபி தலைவர்களும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

அதன்பிறகு, பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார்.  சட்டப்பேரவைக்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே நீண்ட நேரத்துக்குப் பின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, சட்டப்பேரவைக்குச் செல்லும் முன் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று ஆதித்யா தாக்கரே வழிபாடு செய்தார்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 288 எம்எல்ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.