சென்னை:

ரும் பிப் 21ம் தேதி, தனது கட்சிப் பெயரை வெளியிடப்போவதாக அறிக்கைவிடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதையடுத்து, அவரது கட்சியின் பெயர் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கான விடை, அவரது அறிப்பிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக தமிழக கட்சிகளின் பெயர்களில் “கழகம்” என்ற வார்த்தை இருக்கும். திராவிடர் கழகத்தில் துவங்கி, தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. என்று பிரபல கட்சிகளில் பெயர்களில் “கழகம்” என்ற வார்த்தை உண்டு. அதே போல வெளியில் தெரியாத நூற்றுக்கணக்கான “லெட்டர் பேட்” கட்சிகள் தங்கள் கட்சி பெயரில் “கழகத்தை” சேர்த்திருப்பது கண்கூடு.

ஆனால் கமல் கட்சியின் பெயரில் “கழகம்” என்ற வார்த்தை இருக்காது என்பது அவரது அறிக்கையின் ஒரு வார்த்தை மூலமாகவே தெரிகிறது.

“எனது மக்கள் சந்திப்பு கவர்ச்சிக் கழகம் அல்ல” என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே போல “புரட்சி,” போன்ற வார்த்தைகளும் இருக்காது என்று யூகிக்க முடிகிறது.

“புரட்சி முழக்கமும் இல்லை” என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

“ தேசிய ஒருமைப்பட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருப்பது இதை உணர்த்துகிறது.

மேலும், “இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தவிர கட்சியின் பெயரில் “தேசிய” என்ற வார்த்தை இருக்க வாய்ப்பு உள்ளதாகத் தோன்றுகிறது.

அதோடு, “கமல் எதிலும் வித்தியாசமாக சிந்திப்பவர். ஆகவே ஆங்கிலத்திலேயே தனது கட்சிக்கு பெயர் வைப்பார். அது, “தேசிய முற்போக்கு கட்சி” – “National Progressive Party – என்ற வகையில் இருக்கலாம்” என்று கூறப்படுகிறது.

ஆனாலும், “நாடு – தேசியம் என்றெல்லாம்  தனது கட்சியின் பெயரில் வைத்தாலும் கமல் அரசியல் செய்யப்போவது.. அதாவது விமர்சிக்கப்போவது தமிழக ஆளும் – ஆண்ட தரப்பினராகத்தான் இருக்கும். தேசிய அரசியலில் அவர் ஈடுபடமாட்டார். ஏற்கெனவே மத்திய பா.ஜ.க. அரசு பற்றிய கேள்விகளுக்கு நழுவலாக பதில் அளித்தவர்தான் அவர்” என்ற கருத்தும் அரசியல்வட்டாரத்தில் உலவுகிறது.

ஆனால் கமல் ரசிகர் மன்ற வட்டாரத்தில், “தமிழக அரசியலையும் கடந்து தலைவர் (கமல்) தேசிய அரசியலும் செய்வார். தேசிய அளவில் கட்சிகளின் நடவடிக்கைகள், மத்திய அரசின் நடவடிக்கைகளை குறித்து நிச்சயமாக விமர்சிப்பார். ஏற்கெனவே அப்படி விமர்சிக்கவும் செய்திருக்கிறார்” என்று உறுதியோடு கூறுகிறார்கள்.