பிப். 21 கட்சி பெயரை அறிவிக்கிறார் கமல்

Must read

 பிப். 21ம் தேதி கட்சிப்பெயரை  அறிவித்து அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப்போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதிரடியாக ட்விட்டரில் அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வந்தார் கமல். இதையடுத்து ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து கொசஸ்தலை ஆற்றை ஆய்வு செய்தார், ஆள்வோர் மீதான புகார்களை பதிவு செய்ய ஆப் ஒன்றை துவங்கினார். இதனால் பரபரப்பாக பேசப்பட்டார்.

ஆனால் திடீரென மவுனமானார். விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக்கட்டப்பணிகளுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். பரபரப்பாக நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்தும்,  குமரி மாவட்டத்தைப் பாதித்த ஓகி புயல் பாதிப்பு குறித்தும் கருத்து அவர் ஏதும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இதுவும் விமர்சனத்துக்குள்ளானது.

நீண்ட நாட்கள் கழித்து இவை குறித்து கருத்து தெரிவித்த நிலையில், தற்போது தனது கட்சிப் பெயரை அறிவித்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து கமல், “வரும் பிப். 21ம் தேதி ராமநாதபுரத்தில் எனது கட்சியின் பெயரை அறிவிக்கிறேன். அதோடு அரசியல் சுற்றுப்பயணமும் மேற்கொள்கிறேன். ராமநாதபுரத்தோடு, மதுரை, சிவங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயணம் நடக்கும்” என்று அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் முழு விபரம்:

என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன்.

ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.

இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும்.

பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும், நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம் அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்றுகொண்டிருக்கிறேன்.

இது ஆட்சியைப் பிடிக்க திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்.

– அன்பன்,

கமல்ஹாசன்”

More articles

Latest article