சென்னை:

னக்கு பெரியார் விருது வழங்கப்பட்டதற்காக  கிண்டல் செய்வதா என்று நெட்டிசன்களுக்கு வளர்மதி கண்டனம் தெரிவித்தார்.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை வகித்தார்.

சமீபத்தில் தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் பேசியபோது, “ பெரியார் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியல் வெளியிட்டபோது தொலைக்காட்சியில் அச் செய்தியை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் சிலர் கேலி சித்திரங்களை பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த கேலி சித்திரங்களில், தினந்தோறும் கோயில்களுக்கு செல்லும் வளர்மதிக்கு பெரியார் விருதா என்பதும் ஒன்று.

நான் அதை பார்த்து சிரித்துக் கொண்டேன். தந்தை பெரியார் நான் 9 வயது சிறுமியாக இருக்கும்போது எனது சொந்த கிராமத்துக்கு வந்தார். அப்போது எனது தந்தை எழுதி கொடுத்ததை பெரியார் அமர்ந்த மேடையில் பேசினேன்.  பெரியாருக்கு முன்னால் என் மேடை பேச்சை துவங்கிய நான் இன்றைக்கு பெரியார் பெயரில் விருதை பெறுவேன் என்று நினைத்துக்கூடப்  பார்க்கவில்லை.

முதல்வர் எடப்பாடி எனக்கு பெரியார் விருது தந்தது தவறா?

பெரியார் கொள்கை என்பது கடவுள் இல்லை என்பது மட்டும்தானா?  அவரது இரண்டாவது மிகப்பெரிய கொள்கை பெண் உரிமை, முன்னேற்றம், வளர்ச்சி. அதனால் தமிழக முதல்வர் ஒரு பெண்ணை தேடிப்பிடித்து பெரியார் விருதை எனக்கு  அளித்தருக்கிறார்.

நான் கலப்பு திருமணம் செய்திருக்கிறேன்.  எனது இரு  பிள்ளைகளுக்கும் கலப்பு திருமணம் செய்து வைத்துள்ளேன். இன்றைக்கும் என் பிறந்த ஊரில் என்னை கறுப்பு சட்டைக்காரர் மகள் என்று சொல்வார்கள். ஆகவே எனக்கு பெரியார் விருது கொடுத்தது தவறல்ல. இதை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!” என்று வளர்மதி பேசினார்.