சென்னை:

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட ஓட்டுநர் ராஜா கைதான தகவலை அறிந்த தீபா மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). இவர் தியாகராயநகரில் உள்ள கடை ஒன்றில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிகிறார்.

நேற்று அவர் வாடிக்கையாளர் வீட்டுக்கு ஏ.சி.யை ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது உரசிவிட்டார்.

இதனால் கார் உரிமையாளர் ரமேஷ்குமாரை தாக்கி, செல்போனையும், ஆட்டோவில் இருந்த ஏ.சி.யையும் வாங்கி வைத்துக்கொண்டு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரமேஷ்குமாரை தாக்கியது ஜெ.தீபாவிடம் கார் ஓட்டுநராக இருந்த ராஜா என்பது தெரிந்தது. அவரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

பேரவையில் இருந்து ராஜாவை கடந்த வாரம் ஜெ. தீபா நீக்கினார். ஆனாலும் அவர் கைதான தகவலை அறிந்த ஜெ.தீபா மாம்பலம் காவல் நிலையத்துக்கு சென்று அவரை விடுவிக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் எச்சரித்ததும் தீபா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஓட்டுநர் ராஜா, பேரவை பொறுப்பாளர்களாக நியமிக்க பலரிடம் பணம் வாங்கினார் என்றும், இது தீபாவுக்கு தெரிந்தே நடந்தது என்றும் கூறப்பட்டது. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், ராஜாவை தீபா நீக்கியதாக நாடகமாடினார் என்றும் கூறப்பட்டது.

தற்போது ராஜாவுக்காக காவல்நிலையம் வந்து தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது அதை உறுதிப்படுத்துவதாக இருப்பதாக பேசப்படுகிறது.