ஏ. கொ. இ.: 7: இளையராஜாவின் எதிர் நடை! – நியோகி

Must read

கி

ந்த ஒரு பாடலாக இருந்தாலும் அதற்கு தாளம் என்பது மிக, மிக அவசியம் ஆகும். தாள வாத்தியங்களால் எத்தனையோ பாடல்கள் அதன் உச்சத்தை அடைந்திருக்கின்றன.

மேலும், தாள வாத்தியங்களும் கூட ஒரு பாடலுக்கு அனுசரணையாகவே இருக்க வேண்டும். அதாவது, தனியே துருத்திக் கொண்டு முன்னே வந்து  நின்றுவிடக் கூடாது.

எப்படித்தான் இருக்க வேண்டும்…? கல்யாணக் காட்சிகளில் கணவனோடு வளைய வரும் புதுப்பெண் போல இருக்க வேண்டும். அதாவது, கணவனை விட அதிகமாக உடுத்தி, அலங்காரம் செய்திருந்தாலும் கூட, சற்றே பின்வாங்கி, இழைந்து வரும் பாந்தமான அழகைக் கொண்டிருக்க வேண்டும்.

இளையராஜா பாடல்களில் இந்த மரபழகு, அதன் தங்க விளிம்பில் ஜொலிப்பதை நம்மால் உணர்ந்து சுகிக்க முடியும். அவரது பாடல்களில், தபேலாவின் “கரனை” மீது ஒரு சொல் கூட பிசகி விழுந்து விடாது. அரிதி, மோரா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இஷ்டத்துக்குச் சுற்றிக் கொண்டு வந்து அனாவசியமாக எழுந்து, பாடலின் மீது பொத்தென்று விழாது.

நூல் பிடித்தாற் போல – ஒரு ஜாதிக் குதிரையில் நடை பழகல் போல… அலுங்காமல், குலுங்காமல், பாடலோடு பின்னிழைந்து ஓடிவரும். ஹெட் செட் மாட்டிக் கொண்டால்…இரண்டு காதுகளிலும், இளையராஜாவின் இசையொழுக்கம் ததும்பி வழியும்.

ஆனாலும், பெண்மையாகப்பட்டது தன் தனித்துவத்தைக் காட்ட வேண்டிய இடங்களும் உண்டல்லவா…?  என்னேரமும் அப்படி பின்னிழைந்தே ஒலிக்க முடியாது அல்லவா…? அதை ஆமோதிப்பது போலவும், சிலபல பாடல்களில் தன் தாளங்களை  அமைத்திருக்கிறார் இளையராஜா.

அதற்கு, “எதிர் நடை” என்று பெயர்.

அதாவது, பாடல் செல்லும் போக்கின் எதிரிலிருந்து, அதன் தாளம் ஒலித்த படியே கூட வரும்.  ஆனாலும், கொஞ்சம் கூட உறுத்தாமல், கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும். இப்படி அமைப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதற்கு, ஆழ்ந்த ஞானம் அவசியம்.

உதாரணத்துக்கு, ப்ரியா திரைப்படத்தில் அமைந்த “என்னுயிர் நீதானே…” என்னும் பாடலைக் கொள்ளலாம். அதன் பல்லவி மற்றும் சரணங்களில் நாம் இந்த இனிமையான எதிர் நடையைக் கேட்டு ரசிக்கலாம். அதன் தாளக் கட்டு, அந்தப் பாடலோடு பின்னிப் பின்னிப் போகும். கேட்கும் காதுக்களை எங்குமே குழப்பாது. ஆனால், லைட் ம்யூஸிக் மேடையில், தாளம் பற்றிய விஷய ஞானம் இல்லாமல் இதை வாசித்து விட முடியாது.

கூடவே, இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன்,

எல்லாப் பாடல்களுக்கும் இந்த “எதிர் நடை” ட்ரீட்மெண்ட் உதவாது. ஒரு பாடலின் மூட். அந்தப் பாடலின் சந்தம். அமையும் வார்த்தைகள். எல்லாவற்றையும் அனுசரித்த பின்பே, அதற்கேற்றாற் போலொரு எதிர் நடையை ஃபிக்ஸ் செய்ய வேண்டும்.  இதிலும், இளையராஜா ஈடு இணையற்றவராக ஜொலிக்கிறார்.

வெள்ளை ரோஜா திரைப்படத்தில் அமைந்த, “தேவனின் கோயிலிலே….” பாடலையும், அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் அமைந்த, “ஆகாய வெண்ணிலாவே…” பாடலையும் கூட சொல்லலாம்.

இந்தப் பாடல்களிலெல்லாம் எதிர் நடை வாசிக்கப்பட்டிருக்கின்றது என்பதை எடுத்துச் சொன்னால் தான் தெரியும். அதிலிருக்கும் தாள நுணுக்கத்தை இசைக் கலைஞர்களால் மட்டுமே சொல்லாமல் உணர முடியும். ஆனால், ஒட்டு மொத்த ஜனங்களாலும் அதை ரசிக்க முடியும். அதுதான் இளையராஜா. அங்குதான் இருக்கிறது அவரது சக்ஸஸ் பாயிண்ட் .

இதைப் போல, ஒன்றல்ல இரண்டல்ல… பற்பல நுணுக்கங்களை தனது  இசையில்  பொதித்து வைத்திருக்கிறார் இளையராஜா !

அவரது நுணுக்கங்களை புரிந்து கொள்ள வாய்ப்பமைந்தால் நாம் வியப்பின் எல்லைக்கு சென்று விடுவோம். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன். இதைப் படித்த பிறகு, நீங்களும் என்னைப் போலவே ஆச்சரியப்பட்டு நிற்கப் போகிறீர்கள் பாருங்கள்…

நாயகன் ! கமலஹாசன் அவர்கள் நடித்து, மணிரத்னம் அவர்களால் இயக்கப்பட்டு, தமிழ் சினிமாவின் மைல் கல்லாய் மாறிப் போன திரைப்படம்.

அந்தப் படத்தில் “நான் சிரித்தால் தீபாவளி…” என்றொரு பாடல் உண்டல்லவா..? அந்தப் பாடலுக்கு “பாங்கோஸ்” என்னும் ரிதம் இன்ஸ்ட்ருமெண்ட்டைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. அதைப் பயன்படுத்தினார் என்பதை விட, அதை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதில் தான் இருக்கிறது, அதன் சுவாரசியமும் – சிறப்பும் !!

அதற்கு முன், பாங்கோஸ் எனப்படும் அந்த வாத்தியம், தமிழ்நாட்டுக்கு இறக்குமதியான கதையைப்  பார்த்து விடுவோம். அப்போதுதான் நான் சொல்லப் போவதன் சுவை இன்னும் கூடும்.

“பாங்கோஸ்” என்பது, நமது நாட்டு வாத்தியமில்லை. பிரபல அரசியல் புள்ளியான ஃபிடல் காஸ்ட்ரோ தோன்றிய க்யூபா நாட்டின் தாள வாத்தியம் ஆகும். இரண்டு சிறிய ட்ரம்களால் ஆன இதனைக் கால்களின் இடுக்கில் வைத்துக் கொண்டு,சர்ச்களில் வாசிப்பதைக் கண்டிருக்கலாம்.

இந்த வாத்தியம், இந்தியாவில் முதன் முதலில் வந்திறங்கியது பாம்பேவுக்குத்தான். ஆம், “பாங்கோஸை” ஹிந்திப் பாடல்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். அப்படி ஒரு வாத்தியம் இருப்பதே தென்னகத்துக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால், வித்தியாசமான சவுண்டாக இருக்கிறதே என்று அதைக் கேட்டபடி நாம் மயங்கிக் கொண்டிருந்தோம். “மைலா” என்னும் ஒரு வகையான தபேலாவை வைத்து, பாங்கோஸ் போன்ற ஒலியை எழுப்பி வாசித்துத் திருப்திப் பட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில்தான் தமிழ் திரையுலக ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தன்னுடைய ஜெமினி ஃபிலிம்ஸ் மூலமாக பெரும் பொருட் செலவில் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” திரைப்படத்தை ஆரம்பித்தார்.

அந்தப் படம், ஹிந்தியிலும் தயாராவதால் வியாபாரத்தையும் கருதியவர், பாம்பேயில் இருந்து சி.ராமசந்திரா என்னும் புகழ்பெற்ற இசையமைப்பாளரை இங்கே அழைத்து வந்தார்.

வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படத்தில் அமைந்த “மாலை தேடி மச்சான் வரப் போறான்…வரப் போறான்..” எனும் பாடலுக்கு “பாங்கோஸ்” வாத்தியத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார் சி.ராமச்சந்திரா. எங்கும் அதே பேச்சாக இருந்தது.

அந்த நேரத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் ஆர்கெஸ்ட்ராவில்… “பர்க்கஷன் ப்ளேயர்” ஆக வாசித்துக் கொண்டிருந்தவர் திரு. கோபாலகிருஷ்ணன். அவருக்கு, புது வாத்தியமான அந்த “பாங்கோஸின்” மீது ஒரு கண். ஏன்…மையல் என்றே சொல்லலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோ பக்கமே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருந்தார்.

சி.ராமசந்திரா அவர்களின் ஆர்கெஸ்ட்ரா, வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படத்தின் இசைக் கோர்ப்பு  வேலைகளை எல்லாம் முடித்து பாம்பே திரும்புவதற்குள்…

அந்த க்ரூப்புக்குள் ஊடுறுவி, ஆள் பிடித்து, நட்பு வளர்த்து, தமிழ்நாட்டு உணவுகள், பன்னீர் புகையிலை என பலவிதமாக அவர்களைக்   கவனித்து, கேட்ட விலையைக் கொடுத்து, அப்படி இப்படி ஒருவழியாக அந்த “பாங்கோஸை” கைப்பற்றியே விட்டார் கோபாலகிருஷ்ணன். ஒரு புதிய தாள வாத்தியத்துக்காக அன்று எப்படியெல்லாம் மெனெக்கெட்டுப் பேராடியிருக்கிறார்கள் பாருங்கள்.

இன்று, ஆன்லைன் ஈபேயில் வெறும் 1000 ரூபாய்க்குக் கிடைக்கிறது “பாங்கோஸ்”. ஆனால், அதன் அன்றைய மதிப்பு கோடி ஆயிற்றே…!?

சரி, பாங்கோஸை வாங்கி வந்து விட்டார்…! ஆனால், அதை எப்படி வாசிப்பது…?

தனி அறையில் அமர்ந்து , தானாகவே முயன்று முயன்று வாசித்துக் கற்றுக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அந்தக் காலத்தில் பாங்கோஸ் இசைக்கத் தெரிந்த ஒரே ப்ளேயர் அவர்தான். அதன் பிறகு, பாங்கோஸ் வாத்தியம் எம்.எஸ்.வியின் பல பாடல்களில் இடம் பெற ஆரம்பித்தது.

ஆரம்ப காலத்தில், இதில் ஒரு சுவாரஸியமான விபத்து நடந்து விட்டது. அதுதான் இந்தக் கட்டுரைக்குண்டான விஷயமும் கூட…

“மாலை தேடி மச்சான் வரப் போறான்….” பாடலில், அந்த பாடலின் அவசியம் கருதி, பாங்கோஸின் இடது பேஸ் ட்ரம்மின் ஸ்ருதியை நன்றாகக் குறைத்து வைத்து, மிகவும் லோவாக வாசிக்க வைத்திருப்பார் சி.ராமச்சந்திரா.

“ஓஹோ… பாங்கோஸ் என்றால் அப்படி, லோவாகத்தான் வாசிக்க வேண்டும் போல…” என்று தவறுதலாக கருதிக் கொண்டு, ரொம்ப நாளாக லோ பேஸ் ட்ரம்மாகவே வைத்து, பாங்கோஸை இசைத்துக் கொண்டிருந்தார்கள் நம்மவர்கள். பிறகுதான் உண்மை தெரிந்து மாற்றிக் கொண்டார்கள்.

அதன்பிறகு, நம் இசைக் கலைஞர்களுக்கு சொல்ல வேண்டுமா..? ட்ரம்ஸ்ஸில் ஸ்டிக் வைத்து வாசிக்க வேண்டிய ரோல்களைக் கூட… பாங்கோஸிலேயே அனாயாசமாக வாசிக்கும் அளவுக்கு, சக்கை போடு போட்டார்கள்.

இப்போது விஷயத்துக்கு  வருவோம்.

நாயகன் படத்தை, மணிரத்னம் ஒரு பீரியட் படமாக எடுத்துக் கொண்டிருந்தார் அல்லவா..? அதற்காக… அந்தக் காலத்தின் உடைகள், அந்தக் காலத்தின் ப்ராப்பர்ட்டீஸ், அந்தக் காலத்தின் ஹேர் ஸ்டைல் எனத் தேடித் தேடி  ரிசர்ச் செய்து அமைத்திருந்தார். படம் வெளிவந்ததும் எல்லோரும் அது குறித்துப்  பாராட்டினார்கள்.

ஆனால், அந்தப் படத்தில்  இளையராஜாவும் தன் பங்குக்கு பீரியட்டைக் காட்டியிருந்தார். ஆனால், இதுகாறும் எந்த விமர்சனத்திலும் அந்த நுணுக்கத்தை யாரும் மென்ஷன் செய்யவே இல்லை.

ஆம், “நான் சிரித்தால் தீபாவளி….” பாடலில், பாங்கோஸை இசைத்திருந்தார் என்று சொன்னேன் அல்லவா..? அது, அந்தக் காலத்து பாங்கோஸ் !!

எந்த பாங்கோஸ்….? இடது பக்க ட்ரம்மை லோவாக்கிக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தார்களே….? அந்த ‘பாங்கோஸ்” !

அப்படி வாசிக்க வைத்ததன் மூலமாக, தன் பங்குக்கு “பீரியட்டை” காட்டி முத்திரை பதித்திருந்தார் இளையராஜா.

இந்த நுணுக்கம் அதற்குரிய பாராட்டை இன்னமும் பெறவேயில்லை. இது போன்று எவ்வளவோ ஆதங்கங்கள் நமக்கு இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தானொரு அகண்ட கங்கையாய் அசைந்தாடிய படி, தன் வழியே நகர்ந்தோடிக் கொண்டிருக்கிறார் நம் இளையராஜா.

புதிது புதிதாய் தன் ரசிகர்களுக்கு ஏதேனும் படைத்தாக வேண்டுமே என்னும் அவரது இசை வேட்கையை எண்ணிப் பார்க்கும் போது, வீழ்ந்து வணங்கத்தான் தோன்றுகிறது.

அது,1980. ஜனவரி ஒன்றாம் தேதி. ஒரு நல்ல பாடல் பதிவுடன் இந்த ஆண்டைத் துவக்கலாம் என்று எண்ணினாரோ என்னவோ…

சில்லென்ற அதிகாலையின் செக்கர் வானத்தில்… சிறகசைத்துப் போகும் ஓர் குயிலின் மனநிலையில் நின்று கொண்டு… “புத்தம் புது காலை…பொன்னிற வேளை…” என்னும் அந்த ஈடு இணையற்றப் பாடலை, “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்துக்காக கம்போஸ் செய்து, ரிக்கார்ட் செய்தார் இளையராஜா.

அதில், நம்முடைய இந்திய ஃப்ளூட்டும் வரும், கூடவே மேற்கத்திய “கீ ஃப்ளூட்” டும் வரும். இந்திய ஃப்ளூட்டை இசைத்தது இளையராஜாவின் ஆஸ்த்தான கலைஞராக இருந்த திரு.சுதாகர். அந்தப் பாடலில் இடம் பெற்ற “கீ ஃப்ளூட்” டை வாசித்தது…ஹாலந்து நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணி. அந்த வெளிநாட்டு இசைக் கலைஞரின் பெயர் மிங்கே.

திறமைகளை தேடித் தேடி வலை வீசிக் கொண்டேயிருப்பார் இளையராஜா. அதன் மூலமாக, புதுப்புது சப்த ஜாலங்களைக் காற்றில் மிதக்க விட்டுக் கொண்டேயிருப்பார்.

இன்று, ஹங்கேரியில் சென்று கம்போஸ் செய்து வருகிறேன்….துபாயில் சென்று மெட்டுப் போட்டு வருகிறேன்…பாங்காக்கில் சென்று பிஜிஎம் பிடித்து வருகிறேன் என்றெல்லாம் “கீ போர்டு” களைத் தூக்கிக் கொண்டு, ஆடம்பரமாக “எக்ஸிக்யூட்டிவ் க்ளாஸில்” பறக்கிறார்கள்.

மொத்த செலவும் தயாரிப்பாளர்களின் தலையில்தான். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல்… பாவப்பட்ட தயாரிப்பாளர்கள், ஏர்போர்ட் லவுஞ்சில் வராத சிரிப்பை வரவைத்துக் கொண்டு, கை குலுக்கி, மேல் செலவுக்கு டாலர்களை திணித்தபடி, வழியனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அன்று… இளையராஜாவின் இசையிலும் பற்பல வெளிநாட்டுக் கலைஞர்கள் வாசித்தார்கள். அதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபம்தானே தவிர, கொஞ்சமும் செலவு இல்லை. எப்படி..?

சென்னையில், கலாக்க்ஷேத்ரா என்று ஒரு இடம் இருக்கிறது. ருக்மிணி அருண்டேல் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் போன்ற அந்தப் பள்ளியில், இந்தியப் பாரம்பரிய இசை, நடனம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஆண்டு தோறும் வெளிநாட்டிலிருந்து இசைக் கலைஞர்கள் வருவதுண்டு.

அப்போது, உலகப் புகழ்பெற்ற வயலின் இசைக் கலைஞரான எல்.சுப்ரமண்யம் அவர்களின் சகோதரர், திரு. எல்.வைத்தியநாதன் அவர்கள் இளையராஜாவோடு பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் மூலமாக, கலாக்க்ஷேத்திராவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களைத் தன் ஸ்டூடியோவுக்கு வர வைத்து, அவர்களுக்கு தெரிந்த  இசைக் கருவிகளை வாசிக்க சொல்லிப் பார்த்து, அவர்களுக்கேற்றாற் போல ஓர் பிஜிஎம் மையும் கம்போஸ் செய்து, அவர்களையே வாசிக்க வைத்து, புத்தம் புதிய சப்த ஜாலங்களை காற்றில் ஏற்றி விட்டு விடுவார்.

ரகிகர்களுக்கு மட்டுமா, தயாரிப்பாளர்களுக்கும் ஏகக் குஷி ! இசைக் கற்றுக் கொள்ள வந்த இடத்தில், காசும் சம்பாதிக்கிறோமே என்று வெளி நாட்டு மாணவக் கலைஞர்களுக்கும் குஷி !

இப்படித்தான், அடுத்த வாரிசு திரைப்படத்தில் அமைந்த “ஆசை நூறு வகை…” பாட்டில்… “டக்காஹாஷி” என்னும் ஜப்பானை சேர்ந்த ஃப்ளூட் மேதையை அழைத்து வந்து வாசிக்க செய்தார் இளையராஜா.

உலகப் புகழ்பெற்ற ஃப்ளூட் மேதையான “டக்காஹாஷி” அவர்களின் ஸ்பெஷாலிட்டி “எக்ஸ்ப்ரஷன்ஸ்” ஆகும் ! ஆம், இசையை வெறும் ஸ்வரமாக மட்டுமே வாசிக்காமல், அதன் மன நிலையை வெளிப்படுத்துவதில் வல்லவர் அவர். அதற்காகத் தனிப் பயிற்சி எடுத்துக் கொண்டு, அதில் தேர்ச்சிப் பெற்றவர். அதை மட்டுமே அமேரிக்கப் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பேற்பட்ட “டக்காஹாஷி” சென்னைக்கு வரும் நேரம் பார்த்து, அவரைத் தன் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து, சில சிறப்பு இசைக் குறிப்புக்களை அவரிடம் கொடுத்து வாசிக்க வைத்தார் இளையராஜா.

“ஆசை நூறு வகை…” பாடலின் பி.ஜி.எம்மின் ஆரம்பத்தில், பீறிட்டு எழும் ஓர் உற்சாகமான மனநிலையை “டக்காஹாஷி” யின் ஃப்ளூட் மூலமாக, நமக்குப் படம் பிடித்துக் காட்டியிருப்பார் இளையராஜா.

இது போன்ற இடைவிடாத  இசை முனைப்புகளை எல்லாம், எந்த மேடையிலும், அவர் பெருமையாக பறை சாற்றிக் கொண்டதில்லை. இதைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் கூட, அதை வெளியே உயர்த்திச் சொல்லாமல், கடந்து போனது ஏன் என்றும் புரியவில்லை.

ஒருவேளை “இளையராஜாவுக்கு, இதெல்லாம் ச..க..ஜ..மப்பா..” என்று எண்ணிக் கடந்து விட்டார்களோ என்னவோ….?

சரி, போகட்டும் !

ஒரு நல்ல சேதியை சொல்லி முடிக்கிறேன்…

1980 ஆம் ஆண்டின் புத்தாண்டுத் தொடக்கமாக, ஹாலந்து நாட்டை சேர்ந்த மிஸ். மிங்கே அவர்களின் அற்புதமான கீ ஃப்ளூட்டை உபயோகித்து,  இளையராஜாவால் “புத்தம் புது காலை…” என்னும் பாடல் ரெக்கார்டு செய்யப்பட்டதை சொன்னேன் அல்லவா..?

காலத்தை வெல்லும் அந்தப் பாடல், “அலைகள் ஓய்வதில்லை”  திரைப்படத்தில் கடைசி வரை பயன்படுத்தப்படாமலேயே கைவிடப்பட்டது. இளையராஜாவின் அதியற்புதமான உழைப்பும் , இசைக் கோலமும், திரையைத் தொடாமல்… காற்று மண்டலத்தில் மட்டுமே மிதந்து கொண்டிருந்தது.

இளையராஜாவைக் கொண்டாடும் என்னைப் போன்ற அவரது ரசிகர்களுக்கு… இதை விட ஒரு நல்ல சேதி வேறு என்ன  இருந்து விட முடியும்…!!?

(இப்போதைக்கு தொடர் நிறைவடைகிறது..  மீண்டும் வேறு வேறு கோணங்களில் இளையராஜாவின் இசையை ரசிப்போம்..)

More articles

Latest article