கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 38

பா. தேவிமயில் குமார்

கனவே கலையாதே

அன்று மாபெரும்
அதி தேவதையாய் ஆராதிக்கப்பட்டேன்
வழிபாட்டுக் கூட்டத்தில்

அந்தக் கூட்டத்தின்
ஆளுமை சின்னமாக அறிவிக்கப்பட்டேன்
அரசியல் களத்தில்!

வேட்டைக்குப் போகும்
உரிமை இனி
ஆண்களுக்கும்
உண்டென அறிவித்தேன்!.

16 மகாஜன பதத்தின்
பாடசாலைகளில்
பெண் கல்விவேண்டுமென
போராடுகிறேன்!

வணிக கப்பல்கள் யாவும்
என் தலைமையில்
அணிவகுத்து செல்கின்றன……
யவனத்திற்கும் மெலுகாவிற்கும்!

அடிமைச்சந்தையின்
ஆண் வியாபாரிகளை ஓடவிட்டு
அடித்து துவைத்து அலறவிடுகிறேன்….
என் செங்கோலால் .!

பூமி தாங்க அதிர்வுடன்
புலித்தோல் ஆடை அணிந்து
புதுப் பொலிவுடன்
கோபக் கொற்றவையாக
அடி எடுத்து வைத்தேன்!

அணிலாடும் முன்றிலில்
ஆனந்த கூத்தாடுகிறேன்
மாணிக்க பரல்களோடு!
மகிழ்ச்சியாக !!!

என் அடிமைத்தனத்தை நானே
ஆக்ரோஷத்தோடு ஏகன்
உருவெடுத்து
அழிக்கிறேன்!

அடங்காத ஆத்திரம் கொண்டு
அரச உடை தரித்து
ஆயத்தமானேன் போருக்கு
எதிரணியில்
நேருக்கு நேர் யாரும் இல்லை!
என்னை எதிர் கொள்ள!

காபி போடும் வரை
காத்திருக்க வேணுமா?
என்ற குரல் கேட்டு
விழித்தெழுந்தேன் கனவிலிருந்து!
கலங்கிய கண்களோடு….