கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 37

பா. தேவிமயில் குமார்

ஓடி விளையாடு

அவர்களின் கைகளில்
அள்ளட்டும் மணலை,
ஆனந்தமாகட்டும் இளமை,

பச்சை பொத்தானை தட்டுவதை
விட
பட்டம் விட கற்று கொள்ளட்டும்,

சூரியனை ஒவ்வொரு நாளும்
சிரித்தவாறே வரவேற்கட்டும்,

ஆயுள் ரேகைகளை அவர்கள்
ஓடி விளையாடிய நீட்டிக்கட்டும்!

கால்பந்து, கை பந்தென
கடக்கட்டும் கால சக்கரங்கள்,

வெட்டவெளியில் காணும்
வானை சாளரத்தில் காண
வேண்டாமே!

துள்ளிடும் கனவு மீன்களை
பள்ளி பையில் அடைத்து
அனுப்பிடலாகாது!

மலரின் மணத்தை குப்பியில்
மாற்றாமல்,
முகர்ந்தே ரசிக்கட்டும்
பிஞ்சுகள்!

இளமையின் இறகுகளை
சமூக வலையில் தேட
வேண்டாம்!

ஆயிரம் நிறங்களை
அடையாளம்
காட்டிட வேண்டாம்
வானவில்லை ரசிக்க
வைப்போம்,

நாடறியுமுன் அவர்கள்
காடறிந்தால், பட்டறிவு
கிடைக்குமே!

மனமும் உடலும்
ஒருங்கே
இணைந்து வளரட்டும்….. ஓடியாடியே!