வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர்  கி.மு.வும் கி.பி.யும் – கிறிஸ்துவும்…

அத்தியாயம்: 8                                                                                                                 இரா.மன்னர் மன்னன்

ஆண்டுகளைக் குறிப்பிடும்போது தமிழில் கி.மு. அல்லது கி.பி. என்ற முன்னொட்டையும், ஆங்கிலத்தில் பி.சி. (B.C.) அல்லது ஏ.டி. (A.D.) என்ற முன்னொட்டையும் நாம் பொதுவாகப் பயன்படுத்துகின்றோம். இதில் கி.மு. என்பதன் விரிவாக்கம் கிறிஸ்துவுக்கு முன், கி.பி. என்பதன் விரிவாக்கம் கிறிஸ்துவுக்குப் பின்.

அடுத்து இவற்றுக்கு இணையான ஆங்கில முன்னொட்டுகளின் விரிவாக்கத்தை இவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கப்போனால், பி.சி. (B.C.) என்பதன் விரிவாக்கமாக ‘பிஃபோர் கிறிஸ்ட் (Before Christ)’ என்பது உள்ளது. இதனை மொழி பெயர்த்தால் கிறிஸ்துவுக்கு முன் என்றே கிடைக்கும். எனவே தமிழ் கி.மு.வும் ஆங்கில பி.சி.யும் ஒரே அர்த்தம் உள்ளவையாக உள்ளன. ஆனால் ஏ.டி. (A.D.) விவகாரம் அப்படி அல்ல, அதன் விரிவாக்கம் ‘அன்ன டோமினி (Anno Domini)’ லத்தீன் சொல்லான இதன் அர்த்தம் ’நமது ஆண்டவரின் ஆண்டு’ என்பது ஆகும். இந்த அர்த்தம் இதன் தமிழாக்கமான ’கிறிஸ்துவுக்குப் பின்’ என்பதோடு பொருந்தவில்லை. ஏ.டி. (A.D.) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ’கிறிஸ்துவுக்குப் பின்’ என்ற சொல்லாட்சியே அடிப்படையில் சரியாக இல்லை.

ஏனென்றால் ’கிறிஸ்துவுக்குப் பின்’ என்றால் ‘கிறிஸ்து இறந்த பின்’ என்ற அர்த்தமே தொணிக்கிறது. ஆனால் இவர்கள் குறிக்க விரும்புவது ‘இயேசு பிறந்த பின்’ என்பதை. முன்பு இந்தியாவில் ஏ.டி. (A.D.) என்பதன் அர்த்தம் ஆஃப்டர் டெத் (After death) என்ற கருத்து இருந்தது. அதாவது ‘இறப்புக்குப் பின்’. அந்த கோணத்தில் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு நிகழ்ந்து இருக்கலாம். இவ்வாறு மொழி பெயர்ப்பில் உள்ள தவறு ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் இதன் ஆங்கில மூலமே தவறுதான்!.

வரலாற்றை அதிகம் வாசிப்பவர்களுக்கும், ஏசுவின் வரலாற்றைப் படிக்க நேர்ந்தவர்களுக்கும் இந்த ஆண்டு வரையறைகளில் ஒரு சந்தேகம் கட்டாயம் ஏற்படும். ஒரு வேளை அந்த சந்தேகம் உங்களுக்கு வரவில்லை என்றால் தொடர்ந்து வரும் பத்தியில் அதை நான் வரவழைக்கிறேன்.

கி.மு.வுக்கு விரிவாக்கம் ’கிறிஸ்துவுக்கு முன்’ என்றே நாம் கொண்டால், கி.மு. சகாப்தம் முடியும் காலத்தில்தான் ஏசு பிறந்தார் என்று அர்த்தம். இயேசு பிறந்த உடனேயே கிறிஸ்துவுக்கு முன் என்ற காலம் நிறைவடைந்துவிடும். இரவு 12 மணியில் புதிய நாள் பிறப்பதைப் போல. அப்படியானால் கி.மு.1ஆம் ஆண்டின் இறுதி நாளின் இறுதி நொடியில் இயேசு பிறந்திருக்க வேண்டும். ஆனால் பாடநூல்களில் உள்ள இயேசுவின் வரலாற்றில் இயேசு கி.மு.4ஆம் ஆண்டில் பிறந்தார் என்று உள்ளது. அதாவது கிறிஸ்துவுக்கு 4 ஆண்டுகள் முன்பாக கிறிஸ்து பிறந்தார்!. இதில் தவறு உள்ளது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படி நிகழ்ந்தது இவ்வளவு பெரிய தவறு? இதற்குத் திருத்தம்  உண்டா?.

ஆண்டுகளைக் குறிப்பதில் ஏற்பட்ட இந்தத் தவறைப் பற்றி அறிந்துகொள்ள இன்றைய நாட்காட்டியின் வரலாற்றை நாம் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டிக்கு கிரிகேரியன் நாட்காட்டி என்று பெயர். ஐ.நா.சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த நாட்காட்டியை உலகின் பெரும்பாலான நாடுகள் பின்பற்றுகின்றன.

கி.மு.45ஆம் ஆண்டில் ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஜூலியன் நாட்காட்டி’ யின் திருத்தப்பட்ட வடிவமைப்பே இந்தக் கிரிகேரியன் நாட்காட்டி. ஜூலியன் நாட்காட்டிக்கும் முன்பாக பண்டைய ரோமானியர்கள் ’10 மாதங்களைக் கொண்டது ஒரு ஆண்டு, அவற்றில்  5 மாதங்கள் 30 நாட்களைக் கொண்டவை, 5 மாதங்கள் 31 நாட்களைக் கொண்டவை (இவை 30, 31 என்று மாறிமாறி வரும்). 300 நாட்கள் போக மீதம் உள்ள 60 நாட்கள் கொண்டாட்ட நாட்கள்’ – என்று ஒரு ஒழுங்கற்ற முறையையே பின்பற்றி வந்தனர்.

அந்த 60 கொண்டாட்ட நாட்களில் இருந்து ஜூலியஸ் சீசர் தனது பெயரில் ஜூலை என்ற மாதத்தையும், அகஸ்டஸ் சீசர் பெயரில் ஆகஸ்டு என்ற மாதத்தையும் உருவாக்கினார். மற்ற 5 மாதங்களில் 31 நாட்கள் உள்ளபோது தனது பெயரிலான மாதம் 30 நாட்களை மட்டுமே கொண்டிருப்பது ஜூலியஸ் சீசருக்குப் பிடிக்கவில்லை, எனவே பிப்ரவரியில் இருந்து அவர் ஒரு நாளை உறுவினார். ஜூலியஸ் சீசருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர், ஏற்கனவே 29 நாட்களோடு இருந்த பிப்ரவரியில் இருந்து இன்னும் ஒரு நாளை உறுவி ஆகஸ்டையும் 31 நாட்கள் உள்ள மாதமாக்கினார். இப்போது பிப்ரவரி 28 நாட்களாக இளைத்து இருந்தது. இதனால் லீப் ஆண்டில் கூடுதலாகக் கிடைக்கும் ஒரு நாள் பிப்ரவரிக்கே பெரிய மனதோடு கொடுக்கப்பட்டது.

உலகம் முழுமைக்குமான காலண்டராக ஜூலியன் காலண்டரைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை அடுத்த 15 நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இத்தாலிய மருத்துவரான அலாய்சியஸ் லிலியஸ் என்பவருக்குத் தோன்றியது. அதனை அப்போதைய திருத்தந்தை பதின்மூன்றாம் கிரிகேரி ஏற்றுக் கொண்டார். ஆனால் பண்டைய ரோமானிய நாட்காட்டியில் இயேசுவுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்க விரும்பினார். தங்கள் புதிய நாட்காட்டி இயேசு பிறந்த ஆண்டில் துவங்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. இதில் ஒரே ஒரு சிக்கல் என்ன என்றால், இயேசு எப்போது பிறந்தார் என்று அப்போது யாருக்கும் துல்லியமாகத் தெரியாது.

இந்நிலையில் கி.மு.6ஆம் நூற்றாண்டின்போது ரோமில் வாழ்ந்த டயனீசியஸ் எக்ஸீகுவஸ் (Dionysius Exiguus) என்ற கிறிஸ்துவத் துறவி உருவாக்கிய ‘அன்ன டோமினி’ முறை இவர்களுக்குக் கிடைத்தது. பண்டைய ரோமன் நாட்காட்டியைப் போலவே 10 மாதங்களைக் கொண்டது அந்த நாட்காட்டி, அது கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அதிகம் வழக்கிலும் இல்லை. அதில் டயனீசியஸ் நாட்காட்டியின் துவக்க ஆண்டை ஏ.டி. 525 (525 A.D.) என்று அறிவித்து இருந்தார். ‘இந்த ஆண்டோடு நமது ஆண்டவர் பிறந்து 525 ஆண்டுகள் ஆகிவிட்டன’ என்பது இதன் பொருள். இது தவறான கணக்கீடு ஆகும். ஆனால் அதை கிரிகேரி அறிந்திருக்கவில்லை, அந்த அன்ன டோமினி முறையை ஜூலியன் நாட்காட்டியில் அப்படியே பொறுத்தி அவர் தனது புதிய நாட்காட்டியை உருவாக்கினார்.

பின்னர் கிறிஸ்துவர்களின் புனித நூலான விவிலியத்தில் இயேசு குறித்து வரும் செய்திகளை ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர்களே, இந்தக் கணக்கீடு இயேசுவின் பிறப்போடு பொருந்தவில்லை என்று கண்டறிந்தனர். சிலர் இந்தக் கணக்கீடு துவங்குவதற்கு 4 ஆண்டுகள் முன்பாகவே இயேசு பிறந்துவிட்டார் என்று கூறினார்கள், இதே ஏற்றுக் கொள்ளவும் பட்டுள்ளது. ஆனால் அது 6 ஆண்டுகளாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. (எனது கருத்தும் அதுவே). இதற்கு ஆதாரங்கள் என்ன?.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு கூறும் நற்செய்தியில்,

’ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்தலகேமில் இயேசு பிறந்தார் (மத் 2:1)’ என்று உள்ளது. பெரிய ஏரோது என்ற அரசன் கி.மு.4ஆம் ஆண்டிலேயே இறந்த ஒரு அரசன் ஆவான். இதனால் இயேசு கி.மு.4ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருக்க முடியாது என்பது உறுதியாகின்றது. மேலும் இன்னொரு இடத்திலே மத்தேயு,

‘(ஏரோது அரசன்) பெத்தலகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆட்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான் (மத் 2:16)’ என்று கூறுகிறார். இதனால் ஏரோது இறக்கும் போது இயேசு 2 வயது குழந்தையாக இருந்திருக்கிறார் என்று நாம் கொள்ளலாம்.

இன்னொரு தேவ செய்தியாளரான லூக்கா,

’சிரியா நாட்டில் குரேனியூ என்பவர் ஆளுநராக இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்ட காலத்தில் இயேசு பிறந்தார் (லூக் 2:1-7)’ என்று சொல்கிறார். குரேனியூவின் இந்தக் கணக்கெடுப்பு கி.மு.6ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதாகக் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதில் இருந்தும் இயேசு பிறந்த ஆண்டு கி.மு.6 என்று நாம் கொள்ளலாம்.

இயேசு பிறந்தது கி.மு.4 அல்லது கி.மு.6 என்று இரண்டு வேறு கருத்துகள் நிலவினாலும் ’கி.மு.’ என்தை கிறிஸ்துவுக்கு முன் என்று கூறுவது சரியான வரையறை அல்ல என்பது மட்டும் எல்லா வரலாற்று ஆய்வாளர்களும் ஒருமனதாக ஏற்ற ஒன்று.

இதனால் பி.சி. – ஏ.டி. முறைக்கு பெயரை மட்டும் மாற்றி பி.சி.இ (B.C.E – Before Christian Era) மற்றும் சி.இ. (C.E – Christian Era) என்று பெயரிடும் வழக்கம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தோன்றின (Christian Era என்பதற்கு கிறிஸ்துவ யுகம் என்று பொருள் கொள்ளலாம்). கி.பி.1854ல் லத்தீன் நூலொன்று முதன்முதலாக ‘கிறிஸ்துவ யுகம்’ என்ற காலப்பகுப்பைப் பின்பற்றியது. பின்னர் ஆங்கில நூல்கள் கி.பி.1649ல் இதனைப் பின்பற்றத் துவங்கின. இதன் மூலம் ‘அது ஏசு பிறந்த ஆண்டு அல்ல கிறிஸ்தவம் பிறந்த ஆண்டு’ என்று அவர்கள் சப்பைக் கட்டு கட்டினர். ஆனால் இயேசு இறந்து வெகுகாலம் கழித்துதான் கிறிஸ்தவம் ஒரு மதமாக உருவெடுத்தது என்பதாலும், ஏசுவின் நான்காம் வயதுக்கோ ஆறாம் வயதுக்கோ கிறிஸ்துவ யுகத்தின் பிறப்புக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்பதாலும் இது சரியான வரையறையாகப் பொருந்தவில்லை.

தவிர கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றாத பல நாடுகள் ’நாங்கள் ஏன் கிறிஸ்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளைக் கணக்கிடவேண்டும்?’ என்று யோசித்தன. இதன் விளைவாக பி.சி.இ. – சி.இ.க்கு புதிய விளக்கங்கள் பிறந்தன. இவற்றில் உள்ள சி (c) – என்ற ஆங்கில எழுத்துக்கு கிறிஸ்ட் (christ) என்பதற்கு மாற்றாக காமன் (common – பொது) என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பி.சி.இ. (Before common era – பொது யுகத்துக்கு முன்னால், பொ.யு.மு.) – பி.சி. (common era – பொது யுகம், பொ.யு.) – என்பதாக இந்தப் புதிய விளக்கங்கள் கட்டமைக்கப்பட்டன. இந்த காமன் (common) என்ற ஆங்கில வார்த்தையின் பொருளாக ’அனைவரும் ஏற்றுக் கொண்ட, பொதுமைப்படுத்தப்பட்ட’ – என்பது இங்கு கொள்ளப்படுகிறது.

கிறிஸ்து (Christ), கடவுள் (Domini) – ஆகிய வார்த்தைகள் இதனால் ஆண்டுக் கணக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்து பிறந்த ஆண்டு இன்னும் சர்ச்சையில் உள்ளபோது இது வரலாற்று ரீதியில் சரியானத் தீர்வாகவும், குழப்பத்தை விளைவிக்காத வடிவமாகவும் உள்ளது. சரியான ஆண்டுக்கு கி.மு. – கி.பி.யை மாற்றுவது என்றால் முழு வரலாற்றையுமே மனிதகுலம் முதலில் இருந்து எழுத வேண்டி இருக்கும். அந்தக் கடினம் இப்போது இல்லை.

இப்போதைய மக்கள் கி.மு. – கி.பி. முறைக்கே பழகிவிட்டார்கள். அதை உடனடியாக மாற்றுவது கடினம். அது பாடநூல்களில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். இந்தியப்பாட புத்தகங்கள் எப்போது இந்த முறைக்கு மாறும் என்று தெரியவில்லை, ஆனால் என்றைக்காவது ஒருநாள் மாறும் என்பது மட்டும் நிச்சயம்.

இப்போதைக்கு யாராவது ’பொதுயுகம்’ – என்று சொன்னால் அதைத் தெரிந்த சிலரின் பட்டியலில் நீங்கள் உங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம்.

(தொடரும்)