டில்லி

லகின் மிகப் பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பல நோயாளிகள் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்று வருவது நாம் காணும் நிகழ்வாகும்.   குறிப்பாக அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இங்கு அனைத்து சிறப்பு மருத்துவர் மற்றும்  மருத்துவ வசதிகள் நிறைந்திருப்பதும் மேலை நாடுகளை விட சிகிச்சைக் கட்டணம் குறைவாக இருப்பதும்  பல நாட்டவரைக் கவர்ந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பெண் விஞ்ஞானி சவுமியா சாமிநாதன், ”மருத்துவ உலகில் இந்தியா பல சாதனைகள் செய்துள்ளன.  அவற்றில்  போலியோவை முழுமையா ஒழித்தது.  குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகம், கருவின் உள்ள குழந்தைகளின் எதிர்பாராத இறப்பு சதவீதத்தைக் குறைத்தது ஆகியவை முக்கியமானதாகும்.  தற்போது இந்திய மருத்துவத்துறை உலகுக்கே முன்னுதாரணமாக உள்ளது.

இதனால் உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது. ஆயினும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாகக் காசநோய் சிகிச்சை குழந்தைகளுக்கான மருத்துவ வசதி இந்தியாவில் குறைந்துள்ளது.  இதனால் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கூறுவது  போலக் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை இந்தியாவின் முக்கிய பின்னடைவாக உள்ளது.

சில மாதங்களாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  எனவே வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும் நோய்கள் குறித்து இந்திய மருத்துவத்துறை ஆராயவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.