ஜெனிவா: உலகளவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பு மருந்த‍ைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு(WHO).

அந்த தடுப்பு மருந்து பல விமர்சனங்களை சந்தித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மகிழ்ச்சியை அளிப்பதாய் உள்ளது.

நோயெதிர்ப்பு தொடர்பான WHO அமைப்பின் வியூக நிபுணர் குழு, இந்தப் பரிந்துரையை செய்துள்ளது. அனைத்து நாடுகளிலும் வாழும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்(முதியவர்கள் உட்பட) இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் தென்னாப்பிரிக்காவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அங்கு உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் மற்றும் சுவீடன் உள்ளிட்ட சில நாடுகள், பெரியவர்களுக்கான தடுப்பு மருந்து பரிசோதனைகளின் முழுமையின்மையை காரணம் காட்டி, அதை, தங்களின் இளம் மக்கள்தொகைக்கு செலுத்துவதற்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில்தான், இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது WHO. “நோயெதிர்ப்பு தாக்கம், வயதானவர்கள் மத்தியில், இந்த மருந்தினால் எவ்வாறு ஏற்படுகிறது என்பது மட்டுமின்றி, இதர வயதினருக்கு ஏற்படும் தாக்கமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது” என்று WHO சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம், முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் இடையிலான காலஇடைவெளியை அதிகரிப்பது குறித்தும் WHO பரிந்துரை செய்துள்ளது.