2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பீமா-கோரிகான் நினைவுதின வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் மீது போலி ஆதாரங்களை காரணம் காட்டி வழக்கு போடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரோனா வில்சன், கைது செய்யப்படுவதற்கு முன் இவரது லேப்டாப்பில் சில கடிதங்கங்களை ‘ஹேக்கர்கள்’ மூலம் பதிவேற்றி இருப்பது அமெரிக்க தடயவியல் ஆய்வு நிறுவனமான ‘ஆர்சினல் கன்சல்டிங்’ உறுதிபடுத்தியுள்ளது.

இந்த கடிதங்களை ஆதாரமாக கொண்டே அவரை போலீசார் அப்போது கைது செய்தனர் என்பது குறிப்பிட தக்கது.

மோடி அரசை கவிழ்க்கவும் அவர் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாக வில்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ரோனா வில்சன்

தற்போது இந்த கடிதங்கள் அனைத்தும் ஹேக்கர்ளை கொண்டு அவரது கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டிருப்பதும், அவற்றுக்கும் அவரது லேப்டாப்பில் உள்ள மைக்ரோசாப்ட் மென்பொருளுக்கும் வேறுபாடு உள்ளதாகவும்.

அந்த கடிதங்கள் அனைத்தும் இந்த லேப்டாப்பில் பதிவேற்றியதிலிருந்து போலீசார் பார்க்கும் வரை அவை திறந்து பார்க்கப்படாமல் இருந்தது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது, இந்த தடயவியல் ஆய்வு குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம், விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தடயவியல் துறையின் இந்த ஆய்வின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வில்சன் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கணிணியில் ஹேக்கர்களை கொண்டு போலி ஆதாரங்களை பதிவேற்றி கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.