சென்னை: ”என்னை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு இவர்கள் யார்?” என ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் துணைமுதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பி.எஸ். ராஜா. இவர் தேனி மாவட்ட ஆவின் தலைவராக இருந்து வருகிறார். இவர் நேற்று திடீரென தனது ஆதரவாளர்களுடன்  திருச்செந்தூர் சென்று, அங்கு தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஓபிஎஸ் ராஜா உள்பட தேனி மாவட்ட நிர்வாகிகள் சிலரை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இணைந்து கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட னர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று தேனியில்  செய்தியளார்களை சந்தித்த  ஓ.ராஜா, என்னை  “கட்சியிலிருந்து நீக்கியது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம்தான் கேட்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நான் சசிகலாவை சந்தித்து வந்தேன் என்றார்.

நான் எதிர்கட்சித் தலைவரையா சந்தித்து வந்தேன்? இவர்கள் யார் என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு? என்னை கட்சியிலிருந்து நீக்கிய உத்தரவு செல்லாது. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து கட்சியில் இருந்து வருகிறேன். அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான். எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட மாட்டேன்.

தேர்தல் தோல்விக்கு காரணம் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும்தான் காரணம்.  அடுத்தக் கட்டமாக, அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அவரை பார்த்து கேட்டு வந்துள்ளேன்.  சசிகலா தலைமையில்தான் செயல்படுவோம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தக் கட்சியை வழி நடத்த வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பமும். தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து இருந்தால், கட்சி ஒன்றும் இல்லாமல் போய் விடும், அதனால்தான் சசிகலாவை ஒன்றாக இருந்து செயல்படுவோம் என அழைத்து வருகிறோம்” என்றார்.

ஓ.ராஜாவின் அதிரடி பேட்டி அதிமுகவில் மேலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி

சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி திடீர் சந்திப்பு…! மீண்டும் உடைகிறதா அதிமுக..