சென்னை: தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி ஓபிஎஸ் ராஜா திடீரென சந்தித்து பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் முன்னிலையில், தேனி பெரியகுளம் அதிமுகவினர் சசிகலா தலைமையை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், ஓபிஎஸ் தம்பியின் திடீர் சந்திப்பு அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது. இதன் காரணமாக அதிமுக மீண்டும் உடைந்து சிதறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தென்மாவட்ட சுற்றுப்பயணமாக நேற்று தூத்துக்குடி சென்ற சசிகலா, அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை தரிசித்து விட்டு வந்தவரிடம், ஓபிஎஸ் தம்பி ஓபிஎஸ் ராஜா சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரை காத்திருக்க கூறிய சசிகலா, சுமார் 3மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு அவரை கூப்பிட்டு பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து ராஜாவுடன் வந்த  தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளையும், லோக்கல் அதிமுக நிர்வாககிளையும் சந்தித்து பேசினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல், அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு அதிமுக வில் ஒற்றுமை இல்லை என்றும், இரட்டை தலைமையே தோல்விக்கு காரணம் என்று அதிமுக தொண்டர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் சசிகலாவும், அதிமுகவில் உள்ள அதிருப்தி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதைத்தொடர்ந்து பல அதிமுக தலைவர்கள், சசிகலாவுக்கு ஆதரவாகவும், ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிராகவும் பகீரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு  தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி ஆலோசனையும், இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி ஆலோசனையும் நடத்தினர்.

இந்த பரபரப்புக்கு இடையில், சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

அப்போது அங்கு ஓபிஎஸ் தம்பி சந்தித்து பேசினார். ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல் அவரது தம்பி நேரடியாக சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இல்லை என்பதால், ஓபிஎஸ் சசிகலாவுடன் இணைய சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. சமீப காலமாக ஓபிஎஸ்-ன் நடவடிக்கை சசிகலாவுக்கு ஆதரவாகே இருந்து வருகிறது. அதுபோல ஒற்றை தலைமை என்ற கோரிக்கையும் அதிமுகவில் எழுந்துள்ளது. மேலும் ஓபிஎஸ்  சசிகலா ஆகியோர் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சமுதாய தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு அதிமுகவில் மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்த இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான சிவிசண்முகம் மற்றும் கொங்குமண்டலத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், அதிமுகவை கைப்பற்றுவது தொடர்பாக விவாதித்தாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ்-ன் மவுன விரதத்தால் அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் அதை மோடி உள்பட சில அரசியல் தலைவர்கள் இணைத்து வைத்தாலும், பதவி ஆசை காரணமாக கடந்த  4 ஆண்டுகளாக இரட்டை தலைமையில் முட்டல் மோதல்களுடன் ஆட்சியை தொடர்ந்து வந்தனர். பல்வேறு விஷயங்களில் இருவரும் முரண்பட்டு, தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டு, தங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பதை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக தலைவர்கள் மீது திமுக அரசும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களை கைது செய்யும் முயற்சியை தொடங்கி உள்ளது.

இதனால் பயந்துள்ள அதிமுக தலைவர்கள் பலர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கின்றனர். அரசியல் அடைக்கலம் தேடி மாற்று கட்சிக்கு செல்லலாமா? என்பது குறித்தும் யோசிக்க தொடங்கி விட்டனர்.   ஆட்சியும் இல்லை, அதிகாரமும்,  பதவியும் இல்லை,  கட்சிக்கு பொதுமக்களிடையே  மரியாதையும் இல்லை என்பதால், சமூதாய பாதுகாப்பு கிடைக்கும் என கருதி சசிகலாவிடம் ஓபிஎஸ் உள்பட அவரை சார்ந்தவர்களும், அவரது ஆதரவாளர்களும்  சரணடைய இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.