கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை பதிவு செய்யும் CoWIN இணையதளத்தில் இருந்து பொதுமக்களின் தரவுகள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டது குறித்து பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த தரவு திருட்டு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், CoWIN செயலியை உருவாக்கியவர்கள் யார் அதற்கான செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மத்திய அரசிடம் இதுகுறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கித் கௌரவ் என்ற சட்டக் கல்லூரி மாணவர் 2021ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அளித்த மனுவுக்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் “நீங்கள் கேட்டுள்ள தகவல் எதுவும் அமைச்சகத்திடம் இல்லை” என்று கூறியுள்ளது.

முன்னதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு அங்கித் கௌரவ் அனுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகிய இரண்டிலும் CoWIN செயலியை உருவாக்கியவர்கள் யார் என்ற விவரம் இல்லாத நிலையில் தற்போது தரவு கசிவு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தைக்கு வந்த இந்தியர்களின் தரவுகள்… சந்தி சிரிக்கும் மத்திய அரசின் தரவு பாலிசி…