நெல்லை: பட்டியலின இளைஞர்கள்மீது ஒரு தரப்பினர் சிறுநீர் கழித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 6 பேர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமத்துவம் என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்ளும் தமிழ்நாட்டில்தான் கடந்த இரு ஆண்டுகளில் அதிக அளவிலான சாதிய வன்முறைகள், சாதிய தீண்டாமைகள் அதிகரித்து வருகின்றன. வேங்கை வயல் தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் மலம் கலக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல இடங்களில் சாதிய வேறுபாடுகளும், திமுக நிர்வாகிகளே சாதி வேற்றுமையை வளர்க்கும் வகையில் செயல்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரங்களில் தமிழநாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்காததால், இந்த வக்கிரமான செயல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சாதிய மோதல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் அந்த பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கஞ்சா பாேதையில் வந்த 6பேர் கொண்ட கும்பல், அவர்கள் இருவரையும், என்ன சாதி என கேட்டு தகராறு செய்ததுடன், அவர்களை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது சிறுநீரை கழித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அவர்களின் குடும்பத்தினர் தச்சநல்லூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி, தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (25), ஆயிரம்(19), நல்லமுத்து (21), ராமர் (22), சிவா (22), லட்சுமணன் (20) உள்ளிட்ட 6 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது வன்கொடுமை வழக்கு, வழிபறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
எங்கே சமத்துவம்? அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் இடமாற்றம்!