நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நாளை) சட்டமன்றம் கூடுகிறது. என்ன நடக்கும் நாளை?

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ், சட்டசபையின் அடுத்த கூட்டத்தை  நாளை (பிப்ரவரி 18-ந் தேதி )  காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டி இருக்கிறார்.

அப்போது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்.

சட்டசபை கூடியதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டுவருவார்.  அதன் மீது அவர் உரையாற்றுவார்.  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார். தொடர்ந்து வேறு பல சட்டமன்ற கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை வெளிப்படுத்துவார்கள்.

பிறகு, அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் ஓட்டெடுப்புக்கு சபாநாயகர் ப.தனபால் விடுவார். தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என மூன்று பிரிவுகளாக வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்துவார். முன்னதாக இந்த தீர்மானத்தில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கொறடாவின் உத்தரவு வாசிக்கப்படும்.

இதையடுத்து சட்டசபையின் 6 பகுதிகளில் (பிளாக்)  ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எண்ணிக் கணிக்கும் முறையில் ஓட்டளிக்க சபாநாயகர் கேட்டுக்கொள்வார். தீர்மானத்தை ஆதரிப்போர் முதலில் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர்களை சட்டசபை செயலாளர் குறித்து வைத்துக்கொண்டு அதைப் படித்துக்காட்டுவார்.

பிறகு இதே முறையில்  எதிர்ப்போர், நடுநிலை வகிப்போரின் பெயர்கள் எழுதப்படும்.

ஆறு பகுதிகளிலும்  ஓட்டெடுப்பு முடிந்தபிறகு, ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.  மெஜாரிட்டி எண்ணிக்கையான 118 மந்திர எண்ணை – ஆதரவை  – முதல்-அமைச்சரின் தீர்மானம் பெற்றிருந்தால், அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக அறிவிக்கப்படும்.

இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஒரு ஓட்டு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக வாக்களிக்க முடியும்.

இப்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்-அமைச்சர் என்பதால், அவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படும். அவருக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தனியாக வேறு இடம் ஒதுக்கப்படுமா  என்ற கேள்வியும் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு முக்கிய கேள்வியும் எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகிய எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அவர்கள்,  கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்பதே அந்த கேள்வி.

ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை சபாநாயகருக்கு முன்கூட்டியே அ.தி.முக. (சசிகலா) தரப்பில்  தெரிவித்திருக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்கள், ஒருவேளை கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி  சபாநாயகரை  கொறடா வலியுறுத்த முடியும்.

 

ஆக, நாளையும் பல பிக் பிரேக்கிங் நியூஸென்ஸகள், தமிழரின் தலையில் விழப்போவது உறுதி.