கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் குண்டு வீச்சு என வன்முறைக்கு மத்தியிலும், மதியம் 1.30 மணிவரை 56.268 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  8ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப். 29) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில்  84 லட்சத்து 93 ஆயிரத்து 255 பேர் வாக்களிக்கின்றனர். அவர்களில்,  43 லட்சம் ஆண் வாக்காளர்கள், 41 லட்சம் பெண் வாக்காளர்கள், 159 மூன்றாம் பாலின வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட சிதால்குச்சி தொகுதியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முற்பகலில்  மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் ஆகியோர் கொல்கத்தாவின் சவுரிங்கீயில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜகதீப் தங்கர்,  தேர்தல் என்பது ஜனநாயகத்தில் மிகப்பெரிய திருவிழா, நாங்கள் இருவரும் வாக்களித்தோம். COVID நெறிமுறை 100% பின்பற்றப்படுகிறது. ஏற்பாடுகளில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  நாட்டின்  ஜனநாயகம் உங்கள் வாக்குகளால் மட்டுமே இயக்கப்படுகிறது. வாக்களிக்காதவர்கள் அவர்களுக்கான உரிமையை இழக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மதியம் 1 மணி வரை 56.28 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் பிர்பம் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுபிரதா மோண்டலுக்கு எதிராக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பல புகார்கள் பதிவானதால் இன்று காலை 7 மணி வரை அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆங்காங்கே சில வன்முறைகளும் வெடித்துள்ளன.

பெலகெடா சட்டமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் வெடித்தது. இதேபோல் மணிக்தலா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான அமைச்சர் சதான் பாண்டேவும் பாஜக வேட்பாளர் கல்யாண் சவுபேவும் ஒரே நேரத்தில் ஆதரவாளர்களுடன் வந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இரு இடங்களிலும் நிலையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.