டெல்லி: தேர்தல் நடைபெற்று முடிந்து 5 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்செலவுக்காக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.695 கோடி நன்கொடை கிடைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தெரியவந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி,  கேரளா,  மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.695 கோடி நன்கொடை  வழங்கப்பட்டு உள்ளது  ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

தேர்தல் செலவுகளுக்காக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதற்கு தேர்தல் பத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு  உள்ளது. அதன்மூலம்,  விரும்பிய கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கி அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம். இவ்விதம் கடன் பத்திரங்களை வாங்கும் நபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். உயர் நீதிமன்றம் அல்லது புலனாய்வு அமைப்புகள் விசாரணைக்குக் கோரும் பட்சத்தில் இவை தெரிவிக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் தங்களது கரன்ட் அக்கவுண்ட் கணக்கில் இந்த பத்திரங்களை பணமாக்கிக்கொள்ள முடியும். ஆனால், இதிலும் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தன்னார்வ தொண்டு அமைப்பு (என்ஜிஓ) உச்ச நீதிமன்றமத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது,

இந்தநிலையில், பாரத ஸ்டேட் வங்கி 5மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி,  தேர்தல் பத்திரங்கள் வெளியிட்டன்.  அதன்படி,   ரூ.1,000, ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடிமுக மதிப்பில் இந்த பத்திரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக கமடோர் லோகேஷ் கே பாத்ரா (ஓய்வு) என்பவர்  ஆர்டிஐ தகவல் மூலம், 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக  எவ்வளவு தேர்தல் பத்திரங்கள்  விற்பனை  செய்யப்பட்டுள்ளது  என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் வழங்கப்பட்டு உள்ளது.

அதில் மொத்தம் ரூ. 695.34 கோடி வசூலாகி உள்ளது  தெரிய வந்துள்ளது.

அதன்படி,   ரூ.1 கோடி முக மதிப்புள்ள பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ.671 கோடி வசூலானதாகவும்,

ரூ.10 லட்சம் முக மதிப்புள்ள பத்திரங்கள் மூலம் ரூ.23.70 கோடி வசூலானதாகவும்,

ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள பத்திரங்கள் மூலம் ரூ.64 லட்சம் வசூலானதாகவும்  தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

2018-ம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு ரூ.10,56.73 கோடியை அளித்துள்ளதும்,  2019-ம் ஆண்டு  5,071.99 கோடியாக அதிகரித்து இருப்பதாகவும்,  கடந்த   2020-ம் ஆண்டில் ரூ.363.96 கோடியாக உயர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.