சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என அம்மாநில காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வரும் நிலையில், மாநில அரசுக்கு ஆதரவாக அம்மாநில மக்கள், அரசியல் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் காவிரியில் 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம் என  ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’  போல பேசி வருகிறார். இதே அளவுதான் கடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கூறிய நிலையில், 3ஆயிரம் கனஅடி நீர்தான் திறக்க உத்தர விட்டது. இந்த விவகாரத்தில், திமுக அரசு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் பேசி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன்வராமல், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு சிறிதளவே  தண்ணீர் தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  செய்தியாளர்கள், அவரிடம், இன்று டெல்லியில் நடைபெற இருக்கும், காவிரி  மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் என்ன பேசப்பட  உள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர், அவசரக் கூட்டத்தில்,  “எங்களுடைய வாதம் ஒன்றுதான். அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும் சரி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவாக இருந்தாலும் சரி, நாங்கள் கேட்பது தமிழகத்துக்கு 12500 கன அடி தண்ணீர் தேவை. ஆனால், காவிரி ஒழுங்காற்றுக் குழு 5000 கன அடி தண்ணீர் திறக்கத்தான் உத்தரவிட்டது. அந்த தண்ணீர் போதவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து போகின்றன.

எனவே, இன்று கூடும்  காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும், நாங்கள் 12,500 கன அடி தண்ணீர் திறக்கவே கோரிக்கை வைப்போம். இதுவரையில் காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த தண்ணீர் திறப்பு குறுவைக்கு போதுமானது என்று சொல்லமுடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பரவாயில்லை அவ்வளவுதான் என்றார்.

கர்நாடகத்தில் தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது தமிழகம் அவர்களிடம் தண்ணீர் கேட்கவில்லை என்று கூறிய அமைச்சர், கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் உள்ளது. அங்குள்ள கேஆர்எஸ் அணையில்,  கடந்தாண்டு இதே நாள் ( 29.02.2022)  அணையின் முழு கொள்ளளவில், 97.08 சதவீதம் தண்ணீர் அதுபோல, கபினியில் 95.74 சதவீதம் தண்ணீர் இருந்தது.  நடப்பாண்டும், இன்றைய நிலவரப்படி 68.55 சதவீத தண்ணீர் உள்ளது. ஏலங்கி அணையில் கடந்தாண்டு இதே நாளில் 90 டிஎம்சி தண்ணீர் இருந்தது, இன்றைய நிலவரப்படி 79 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஹேமவதியில் கடந்தாண்டு இதே நாளில் 99 சதவீதம் தண்ணீர் இருந்தது, அங்கு இன்றைய நிலவரப்படி 49 சதவீதம் உள்ளது என்று கூறியதுடன்,  மேட்டூர் அணையில், கடந்தாண்டு இதே நாளில் 95.66 சதவீதம் தண்ணீர் இருந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி அங்கு 11.78 சதவீத தண்ணீர்தான் உள்ளது.

எனவே, டெல்டா பகுதியில் உள்ள குறுவை பயிர்களை பாதுகாக்க தண்ணீர் திறக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.  கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் கொடுக்கக்கூடிய அளவுக்கு போதிய தண்ணீர் உள்ளது. ஆனால் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்வது நியாயம் அல்ல.

ஒரு ஆற்றின் போக்கில், கடைசிப் பகுதியை டெயில் எண்ட் என்று சொல்வார்கள், அவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். அந்த இயற்கை நீதியையும் கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது.

தமிழகத்தில் உள்ள பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்வதாக தமிழக முதல்வர் நேரடியாக அறிக்கை வெளியிடுகிறார். அதற்கும் அவர்கள் செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவையும் ஏற்க மறுத்து மறியல் போராட்டங்கள் செய்கின்றனர். தினந்தோறும் போக்குவரத்து உள்ளது. எனவே இரு மாநிலங்களும் நட்புடனும், பாசத்துடனும் இருந்தால்தான், மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்பவர்கள் அச்சமின்றி அங்கு வாழ முடியும்.

இரு அண்டை மாநிலங்கள், ஒட்டியருக்கும் மாநிலங்கள் இங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகா மாநிலத்தில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான கன்னட மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர் என்று கூறிய அமைச்சர்,  கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் ஆணையையும் மதிக்காமல், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு சொல்வதையும் மதிக்காமல், தமிழக முதல்வரின் வேண்டுகோளையும்  இருப்பது நியாயம் அல்ல என்றார்.

நீண்டகால அனுபவம் பெற்றவர் கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார். அரசியலில் தேவகவுடா காலத்தில் இருந்து எல்லாவிதமான நடைமுறைகளையும் அறிந்தவர் அம்மாநில முதல்வர் சித்தராமையா இவர்கள் இருவர் மீதும், இன்றுவரையில் நான் தணியாத மதிப்பு கொண்டுள்ளேன். எனவே, எது எப்படி இருந்தாலும், உச்ச நீதிமன்றம், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் விட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.