சென்னை:

காவிரி விவகாரம் குறித்து,கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், கர்நாடக முதல்வரை சந்திக்க இருப்பதாக கூறிய கமலஹாசன், நாம் நமது உரிமைகளை இழந்து வருகிறோம் என்றும்   தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், இன்றைய விசாரணையின்போது, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதுகுறித்து தமிழகம் உள்பட 4 மாநி லங்கள் கருத்துக்களை தெரிவிக்க இரண்டு நாட்கள் உச்சநீதி மன்றம் அவகாசம் அளித்து, வரும் 16ந்தேதி மீண்டும் விசாரணை  நடைபெறும் என்றும் கூறி உள்ளது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல் கூறியதாவது,

வரும் 19-ம் தேதி காவிரி விவகாரம் குறித்து  சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப் படும் என்றார். காவிரி விவகாரத்தில் நாம்  நமது  உரிமைகளை இழந்து வருகிறோம் என்றும், இது மக்கள் பிரச்சனை என்பதால் கட்சிகளை தாண்டி நாம் ஒன்றாக நிற்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த விவகாரத்தில்  தமிழக விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும் என்று வற்புறுத்திய கமலஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திக்க தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.